170கற்பியல்

புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்

உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று

அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்

பரிமலிந் தொழியப் பந்த ரோடி

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்

கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்

கொடுத்த தாதைக் கொடுஞ்சோ றுள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே

(நற்-110)
 

இது தலைவி மனையறங் கண்டு மருண்டு கூறியது.
 

சூ. 156 :

சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய
(13)
 

க - து :

கற்பின்கண் அறிவர் கூற்று நிகழுமாறு கூறுகின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  கிளவிகள்  செவிலிக்கேயன்றி   அறிவர்க்கும்
உரியவாகும்.
 

எ - டு : 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் 

(குறள்-55)
 

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(குறள்-51)
 

இவை நல்லவை யுரைத்தல்.
 

எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை

அட்டிற் புகாதாள் அரும்பிணி - அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ்யேய் இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை 

(நாலடி-363)
 

இஃது அல்லவை கடிதல்.
 

சூ. 157 :

இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும்

கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்

(14)
 

க - து :

அறிவர் கூற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
  

பொருள் :  மனையறக்கிழமை  பூண்ட தலைவனும்  தலைவியும்  அவ்
அறிவர்  வகுத்த  நெறியை  வரம்பாகக்  கோடலின்  அந்நெறியை  அவர்
வழுவிய  காலை இடித்துரைத்து  அவ் எல்லைக்கண் நிறுத்தலும் அறிவரது
கடமையாகும்.