கற்பியல்173

பொருள் :  தலைவன்   பரத்தமை   ஒழுக்கத்தை   இனி   மேவாது
மறுத்தலை    வேண்டுதலானும்,   தலைவி   அவன்   புறத்தொழுக்கினை
அறிந்திருந்தும்   அதனைப்   பொறுத்தாற்றும்   பெண்மைக்  குணமாகிய
மடப்பத்தை    உரிமையாகக்    கொண்டொழுகுதலானும்     சொலத்தகு
கிளவியேயன்றி  அன்பிலை  கொடியை  எனத்  தலைவனைக்  கூறுதற்கும்
தோழி உரியளாவாள்.
  

பணிமொழியேயன்றி  இங்ஙனம்   முனிந்து  கூறற்கும்   உரியள்  என
உம்மை இறந்தது தழீஇநின்றது.
    

எ - டு :

"கண்டவரில் எனும்" நெய்தற்கலியுள்

(125)

அன்பிலை எனவந்து கழறுவல் ஐயகேள்

மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை

முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண்

அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய்

இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ"
 

என மிகைத்துக் கூறியவாறு கண்டு கொள்க.
 

சூ. 161 : 

அவன்குறிப் பறிதல் வேண்டியும் கிழவி

அகமலி ஊடல் அகற்சிக் கண்ணும்

வேற்றுமைக் கிளவி தோற்றவும் படுமே

(18)
 

க - து :

ஊடற்காலத்து நிகழ்த்தும் தலைவி கூற்றிற்குரியதோர் இயல்பு
கூறுகின்றது.
 

பொருள் :  தலைவனது   உள்ளக்குறிப்பினை    அறிய   வேண்டிய
விடத்தும்   தன்    மனத்தே  நிறைந்து   நின்ற   ஊடல்   நீங்குதலைச்
செய்யுமிடத்தும்  தலைவற்குத்தான் வேறாயவள் போல அயன்மைப்படுத்துங்
கூற்றினைத் தலைவி தோற்றுவிக்கவும் பெறும்.
   

எ - டு : 

யாரைநீ எம்மிற் புகுதர்வாய், ஓரும் 

புதுவமலர் தேரும் வண்டேபோல் யாழ 

வதுவை விழவணி வைகலும்காட்டினையாய் 

மாட்டுமாட்டு ஓடி மகளிர் தரத்தர 

பூட்டுமான் திண்டேர் புடைத்தமறுகெல்லாம் 

பாட்டாதல் சான்ற நின்மாயப் பரத்தைமை 

காட்டிய வந்தெமைக் கைப்படுத்தேன் பண்டெலாம் 

கேட்டும் அறிவேன் மன்யான்"

(கலி-98)
 

இதன்கண் 'யாரை நீ' என அயன்மைப்படுத்தியவாறு காண்க.