நூ. 188 : முற்பட வகுத்த இரண்டு என்று அகத்திணையில் தலைவன் கூற்றாக வரும் இரத்தலும் தெளித்தலும் (நூ-182) கூறப்பட்டது போலவே, பாசறைப் புலம்பல் 188ஆம் நூற்பாவில் சுட்டப்பட்டது என்று கூறற்கண் இழுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தலைவன் பாசறைக்கண் நீடியவழித் தலைவி நிலையை அவனுக்கு அறிவித்தல் புறத்தில் பதிற்றுப்பத்து 16ஆம் பாடல் முதலியவற்றிற்காணப்படுவதால் அதனை அகத்திற்கும் கோடற்கண் இழுக்கில்லை. |
பக். 149 : செய்தி தலைவன் மேற்கொள்ள நினையும் தொழிற்கு அச்சம் பயப்பது நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டு இதற்குப் பொருந்துவது யாங்ஙனம்? குறு - 79. பாடல் தலைவன் பிரிந்த பின் தலைவி கூறும் செய்தி பற்றியது. |
பக். 150 : இது முன் நூற்பாவின் தொடர்பான செய்தி இதன்கண் உள்ள எடுத்துக்காட்டும் தலைவன் வினைவயின் பிரிந்த பிறகு கூறப்பட்ட செய்தி பற்றியவே. தலைவன் மேற்கொள்ளப்போகும் வினைக்கு உரியன அல்ல இவ் எடுத்துக்காட்டுக்கள். ஐங் - 317, 474. |
பக். 163 : பல்வேறு புதல்வர்க்கண்டுநனி உவப்பினும் - என்று நேராகப் பொருள் கொள்ளினும் புதல்வர்க்கண்டு பல்வேறு உவப்பினும் எனக் கூட்டிப் பொருள் கொள்ளினும் தலைவனுக்குப் புதல்வர் பலராதல் தேற்றம். சங்கப் பாடல்களில் யாண்டும் தலைவனுக்குப் புதல்வன் ஒருவனே சுட்டப்படுகிறான். எடுத்துக்காட்டுப் பாடற் செய்தியும் அன்னதே. புதல்வற் கண்டு என்ற பாடம் ஏற்குமா? என்பது கருதத்தக்கது.7 |
பக். 177 : முன்னிலைப் புறமொழிக்குக் கலி - 22இன் தரவு முழுதும் எடுத்துக் காட்டாகாது "உண்கடன்.......மொழிக்கண் தாவார்" என்றபகுதியே ஏற்புடையது. எஞ்சிய அடிகள் முன்னிலை மொழிகளே யாதல் தேற்றம். நச்சினார்க்கினியர் தொகைநூல்களில் அகப்பாடல்களை எடுத்துக்காட்டாகத் தரும் பொழுது பொதுவாக அவற்றிற்குக் குறிப்பிடப்படும் துறைகளை விடுத்துத் தாம் புதியதுறை கொள்ளுங்கால் தாம் கொண்ட துறைப்பொருளை விளக்கிச் செல்வதனைக் காணுகின்றோம். இவ்வுரையில் களவுக்கும் கற்பிற்கும் பொதுவாக அமைந்த பாடல்கள் பல எடுத்துக்காட்டாக வந்துள்ளன. அவற்றைத் தாம்கொண்ட கருத்திற்கேற்பச் சிறுகுறிப்பு ஆங்காங்கு வரைந்திருப்பின் அதுபெரிதும் பயன் தருவதாகும். |
|
7. நச்சினார்க்கினியரின் உரைவிளக்கம் ஈண்டுக் கருதத்தக்கது. |