இக்கிளவிகள் புறத்திணை மாந்தராகிய தூதர்க்கும் ஒற்றர்க்கும் உரியவாயினும் அகத்திணைக்கண் கற்பிற்குரிய வாயில்களுள் இவ்இருவர்க்கும் ஏற்கும் எனப் பொருள் நூலோர் அமைத்துள்ளமை விளங்க 'யாத்தவை' என்றார். |
இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை நூலொடு பொருந்து மாறில்லை. இனி, வினைமேற் சென்ற தலைவன்பால் தலைவியது நிலையை உரைப்பின் அவன் செய்வினைக்கண் கலக்கமுறுமாதலின் வினை முடித்த பின்னல்லது தலைவியின் பிரிவாற்றாத நிலையைப் பாசறை முதலிய இடங்களிற் கூறுதல் புலனெறி வழக்காகாமையின் இளம்பூரணர் கருத்து ஆராய்தற்குரியதாகும். அவர் காட்டிய கலிப்பாட்டு (கலி-30) வினைமுற்றிய பின் தலைவனிடத்துக் கூறியதாகும். |
பாணராவார் பல்வகை யாழினும் இசையமைத்துப் பண்ணொடு பாடும் கலைவல் மாந்தர். எடுத்துக்காட்டு வந்துழிக்கண்டு கொள்க. |
| சூ. 172 : | ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் |
| ஏவல் முடிபும் வினாவும் செப்பும் |
| ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் |
| தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் |
| இளையோர்க் குரிய கிளவி என்ப |
(29) |
க - து : | இஃது இளையோர்க்குரிய கிளவி யாமாறு கூறுகின்றது. |
பொருள் :தலைவன் வினைமேற் செல்லுங்காலையும் மீளுங்காலையும் இயங்குதற்குரிய நெடுவழி பற்றிய தன்மைகளை அறிந்து கூறலும், தலைவன் மேற்கொண்ட வினைகளான் விளையும் இன்பத்துன்பங்களை ஓர்ந்துரைத்தலும், தலைவன் ஏவிய வினையைப் புரிந்து வந்து அதன் முடிபினைத் தெரிவித்தலும், தான் ஆற்றவேண்டிய பணிகளை அறிய வினாதலும், வினாய தலைவற்கு விடையிறுத்தலும், தலைவன் செல்லும் சுரநெறிக்கண் கண்ட பொருள்களையும் கருப்பொருள்களின் நிகழ்ச்சிகளையும் உள்ளுறை தோன்றக் கூறலும் [சிறுபான்மை மீண்டு வந்தபின் தலைவிக்குக் கூறலும்] கொள்க. மற்றும் தலைவன் விளங்கிக் கொள்ளுவதற்கு அமைந்த அவை போல்வன பிறகூறலும் இளையோர் நிகழ்த்தற்குரிய கிளவிகளாம். |
பிற என்றது வினை முற்றி மீண்டு வருங்கால் தலைவியது நிலைமைபற்றித் தலைவற்குக் கூறுதல் முதலியவாம். |