பொருளியல்197

எட்டன்  பகுதியும்  விளங்க........நெஞ்சொடு   புணர்த்தும்  என்பது  =
நகை முதலாய மெய்ப்பாடு  எட்டனது பொருட் கூறுபாடுகளும்  புலப்படத்
தமக்குரிய  மெய்,  வாய்  முதலாய   உறுப்புக்களையுடையது   போலவும்
உள்ளுதல்,  துய்த்தல்  முதலாய  உணர்வுகளையுடையது  போலவும் வாய்
திறந்து  சொற்களான்  மறுமொழி கூறுவது  போலவும் தம்  நெஞ்சத்தொடு
அவற்றைச் சேர்த்துக் கூறுதலும் என்றவாறு.
 

நகை முதலாய  மெய்ப்பாடுகள், எள்ளல், இளமை, உடைமை, புகுமுகம்
புரிதல்   முதலாகப்    புறஞ்சொல்    மாணாக்கிளவி   ஈறாகக்   கூறிய
பொருள்களைப்பற்றித்    தோன்றுவன   வாகலின்  "எட்டன்    பகுதியும்
விளங்க"  என்றார். அருவப்  பொருளாகிய  நெஞ்சினைத்  தம்மைப்போல
வைத்துக் கூறலின் "நெஞ்சொடு புணர்த்தும்" என்றார்.
 

சொல்லா   மரபின   வற்றொடு  ......................  அடக்கியும்  என்பது  =
மக்களின்  பேசும்   இயல்பினை.  மொழிப்படுத்துப்   பேசுதற்கு  இயலாத
விலங்கு,   பறவை,   கடல்,   கானல்    முதலியவற்றொடு     பொருத்தி
அஃறிணையாயவை  செய்தற்கியலாத   இயல்புடைய  வினைகளை  அவை
செய்வனவாக அவற்றிற்கு ஏற்றிக்கூறுதலும் என்றவாறு.
 

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் என்பது = தாம் தொடர்புறும்
பிறர் பிறர்  எய்திய  துன்பங்களைத் தாம்   உறும் துன்பத்தை ஒத்ததாகக்
கருதி அவரவரைத் தம் நிலைமையொடு   பொருத்திக் கூறலும் என்றவாறு.
அவரவர்  என்றாரேனும் "ஒருபாற்  கிளவி ஏனைப்பாற் கண்ணும்" (சூ. 26)
என்பதனான்    அவையவை   உறுபிணியும்   கொள்ளப்படும்.  அதனான்
அவற்றின்   இயல்பான  நிலைகளையும்  அவை எய்தியனவாகக்   கருதிப்
பேசுதலும் கொள்க.
 

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ  இருபெயர் மூன்றும்....கிளவி  என்பது
= தம்  மன   அறிவினையும்    பொறிகளினிடமாக     நிகழும்   ஐம்புல
அறிவினையும்  தமவாகக் கூறாமல்   அவற்றைத் தம்மின் வேறாக நிறுத்தி
ஒன்று, பல என்னும் இருபால் அஃறிணைப் பொருள்கட்கும் அறம் பொருள்
இன்பம் என்னும்  உறுதிப்பொருள் மூன்றும் உரியவாகக்  கொண்டு அவை
பற்றி   உவமஞ்  செய்து கூறுதற்கு இயையுமிடத்து  உவமவாயிற்  படுத்துக்
கூறுதலும்   கிழவன்   கிழத்தியாகிய  இருவர்க்கும்   உரிய   ஒருவகைப்
பாகுபாட்டுக் கிளவிகளாகும் என்றவாறு.