206பொருளியல்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்

வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே

(குறு-11)
 

"ஒருசிறை  நெஞ்சமொடு"   எனவே,  மற்று   ஒருசிறை  தோழியொடு
உசாவுங்காலை உரியதாகலும் உண்டெனக் கொள்க.
 

எ - டு :

அருங்கடி யன்னை காவல் நீவி

பெருங்கடை யிறந்து மன்றம் போகி

பகலே பலருங் காண வாய்விட்டு

அகல்வயற் படப்பை அவன்ஊர் வினவி

சென்மோ வாழி தோழி" ..... .....

(நற்-365)
 
எனவரும்.
 
சூ. 206 :

தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்

அன்ன இடங்கள் அல்வழி யெல்லாம்

மடனொடு நிற்றல் கடனென மொழிப

(10)
 

க - து : 

இது  தலைவி மடனொடு நிற்குமிடமும்  மடனழிய நிற்குமிடமும்
இவை  எனக்  கூறுகின்றது.  'தலைவி'  என்பது அதிகாரத்தான்
வந்தது.
 

பொருள்:  தலைவன்  புறத்தொழுக்கத்தைத் தலைவியிடத்து மறைத்து
உரைத்தலும், தலைவனது   கூட்டத்தைத்   தலைவி விரும்புதலும்  ஆகிய
அந்நிலைமையல்லாத       மற்ற      இடங்களிலெல்லாம்      தலைவி
மடப்பத்தையுடையளாகி நிற்றல் கடப்பாடு என்று கூறுவர் நூலோர்.
 

எனவே அவ் ஈரிடத்தும் மடனழிய  நிற்பாள் என்பதாயிற்று.  மடனழிவு
என்றது   தலைவன்   கொளுத்துவன  கொள்ளாமல்  அவற்றை  மாறுபட
எண்ணியுறழ்தலாம்.
 

எ - டு :

"யாரைநீ எம்மில் புகுதர்வாய்" என்னும் மருதக் கலியுள்
(98) தலைவன் "வையை வருபுனல் ஆடத் தவிர்ந்தேன்"
 

என்றவழி
 

ஒ! புனலாடினாய் எனவும் கேட்டேன் புனலாங்கே

நீள்நீர் நெறிகதுப்பு வாரும் அறலாக

மாண்எழில் உண்கண் பிறழும் கயலாக

கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாகம்

நாணுச் சிறையழித்து நன்பகல் வந்தஅவ்

யாணர்ப் புதுப்புனல் ஆடினாய் முன்மாலை

பாணன் புனையாகப் புக்கு"
 

எனத் தலைவனது புறத்தொழுக்கத்தை எள்ளி உரைத்தமை காண்க.