243. சுட்டு என்பதன் விளக்கம் வலிந்து எடுத்துக்காட்டில் பொருத்தப்பட்டுள்ளது. நகை, சிறப்பு என்பனவும் அன்ன, உடனுறையும் உவமமும் சுட்டு, நகை, சிறப்பு என்ற முத்திறங்களை அடிப்படையாகக் கொண்டு வரும் என்பதே ஆசிரியர் கருத்துப் போலும். பின்னர் ஐந்து என்று தொகை கூறியது என்னை எனின்? இருபெயர், பலபெயருள் அடங்கும் அளவின் பெயர், எண்ணியற் பெயர், நிறைப்பெயர், எண்ணின்பெயர் என்பனவற்றையும் தொகுத்து உம்மைத்தொகையை அறுவகையாகக் கூறியதுபோற் கொள்ளலாம். எனவே உள்ளுறைகள் இறைச்சி - உள்ளுறை உவமம் என்ற இரண்டே என்று கோடல் தெளிவும், எளிமையும் தருவதாம். உள்ளுறை இறைச்சி என்ற இரண்டனையுமே விளக்கிய ஆசிரியர் சுட்டு, நகை, சிறப்பு என்பனவற்றை வாளா பெயரளவில் சுட்டிச் சென்றமையும் உளங் கொளத்தக்கது.12 |
247. திருமணம் ஆதற்கு முன்னும் தலைவி, தலைவனை என்னை என்கிறாள். என் தலைவன் என்பதே ஆண்டும் பொருள். எடுத்துக் காட்டுப் பாடலில் என்னை என்பது என் தலைவன் என்ற பொருளிலேயே வந்துள்ளது. தந்தை, தமையன் என்ற பொருளில் வந்திலது. என்னை என்பது என் தலைவன் என்ற பொருளிலேயேயாண்டும் வருதலின்-புறப்பொருள் மேற்கோள் காட்டுதற் கண்ணும் குறையின்று என்று தோன்றுகின்றது. தலைவன் என்ற பெருந்தலைப்பினுள் காதலன் என்பதும் அடங்கும். |