இனி உய்த்துக் கொண்டுணர்தல் என்னும் உத்தியான் உண்டற் கியலாதவற்றை உண்டதாகக் கூறலும் கொள்க. |
தோள்நலம் உண்டு துறக்கப்பட்டோர் (கலி-23) எனவரும். |
உம்மையான் பிறதொழில்பட வருவனவும் கொள்க. |
| எ - டு : | புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் |
| அள்ளிக்கொள் வற்றே பசப்பு |
(குறள்-1187) |
| சூ. 215 : | பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே |
| காப்புக் கைம்மிகுதல் உண்மை யான |
(19) |
க - து : | 'அறத்தொடு நிற்குங் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி' (பொரு-11) என்றதனான் தோழியை வினவாவழியும் தலைவி அறத்தொடு நிற்றற்குரிய ஏதுவும் இடமும்பற்றிக் கூறுகின்றது. |
பொருள் : புறத்தே சொல்லற்கியலாவாறு இற்செறிக்கப் பெற்றுச் செவிலி முதலானோராற் காவல் செய்யப்படும் நிலை ஒரோவழி மிகுதலும் உளவாதலின் அவ்வழித் தோழி வினவா வழியும் தலைவி தனது களவொழுக்கத்தைத் தாயர்க்குப் புலப்படுத்துமாறு கூறுதலும் புலனெறி வழக்கின் கண் நீக்கும் நிலைமைத்தன்று. |
இங்ஙனம் நாணுக் கருதாது கூறற்கு அமைதியும், இது தலைவிக்குரிய மரபு என்பதும் மேல்வரும் சூத்திரத்தான் புலனாம். பொருள் என்றது களவினைப் புலப்படுத்தி நிற்றலையாம். இதனை "உற்றுழி யல்லது சொல்லல் இன்மையின் அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப" எனவும் "அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின்" எனவும் "மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க" எனவும் கூறிய நூற்பாக்களான் தெளிக. |
'பொருள் என மொழிதலும்' என்பதற்குத் தலைவன் பொருள்வயிற் பிரிதல் வேண்டுமெனக் கூறலும் என இளம்பூரணரும், எமர் வரைவு நேராமைக்குக் காரணம். பரிசுப்பொருள் வேண்டி' என நச்சினார்க்கினியரும் பொருள் கூறுவர். "காப்புக் கைம்மிகுதல்" என்னும் ஏது அவர்கருத்துக்குப் பொருந்தாமையறிக. தலைவி அறத்தொடு நிற்றற்குரிய விதிகூறும் சூத்திரம் வேறின்மையானும் இதற்குப்பொருள் இதுவே என்பது தெளியப்படும். |
''மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு |
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்'' |
| (கள-21) |