பொருளியல்221

..... ....... ....... .... ..... ....... ...... ........

என்துயர் நிலைதீர்த்தல் நும்தலைக் கடனே"
 

என்றமையான் அச்செய்யுள்  நாணுத்தலைப்  பிரியாதமைந்துள்ளமை கண்டு
கொள்க.  அவ்வாறே  "அகலாங்கண்"   என்னும்  கலியும்  (143)  தலைவி
கூற்றாக அமைந்து நாணுத்தலைப் பிரியாதுள்ளமை கண்டு கொள்க.
 

சூ. 221 :

முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்

நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே

(25)
 

க - து :

அகப்பொருட்கண் பயின்று வருவதொரு சொல்லைப் பற்றிய
மரபு கூறுகின்றது.
 

பொருள்:  முறைப்  பெயரல்லாததாய், அதன் மருங்காகப் பொருந்திய
தகவுடையதொரு பொதுச்சொல் புலனெறி வழக்கிற் பொருந்திய மரபினானே
ஆஃஉ, மகடூஉ ஆகிய இருபாற்கும் உரித்தாக வரும்.
 

அப் பொதுச்சொல்லாவது  கேண்மை பற்றி வரும்  "எல்லா" என்பதாம்.
இருபாற்கும்  ஒப்ப  வருதலின்  பொதுச்சொல்லாயிற்று.  அது   தலைவன்,
பாங்கன், தலைவி, தோழி  என்னும்  நால்வர்க்கும்  உரித்தாக  வழங்கலின்
"கெழுதகைப் பொதுச்சொல்" என்றார்.
 

ஏடா, ஏடி, எலுவன், எலுவி  என்பவை  பாலுணர  நிற்றலின்  ஈண்டுப்
பொதுச்சொல்   என்றது   'எல்லா'  என்னும்  விளிப்பெயரையே  என்பது
பெறப்படும்.  அஃது எல்லா,  எலா,  எலுவ  எனச் சிறிது திரிந்தும் நிற்கும்
என அறிக.
 

எ - டு :

''எதிர்வளி நின்றாய் நீசெல் இனிஎல்லா"
(கலி-81)
 

இது தலைவியைத் தலைவன் விளித்தது.
 

''எல்லா! நீ முன்னத் தானொன்று குறித்தாய்''

(கலி-61)
 

இது தலைவனைத் தோழி விளித்தது.
 

''எலுவ! சிறாஅர்  ஏமுறு நண்ப'' (குறு- 129) இது தலைவன் பாங்கனை
விளித்தது. பிறவும் வந்துழிக் கண்டுகொள்க.
 

சூ. 222 :

தாயத்தின் அடையா ஈயச் செல்லா

வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா

எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம்

அல்ல வாயினும் புல்லுவ உளவே

(26)
 

க - து :

நாடக  வழக்குப்பற்றி  ஒருவர்  பொருளை மற்றொருவர் உரிமை
கொண்டுரைக்குமாறு கூறுகின்றது.