"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி |
எல்லா உயிரும் தொழும்" |
(குறள்-260) |
"நிலத்தறைந்தான் கைபிழையா தற்று" |
(குறள்-307) |
என வருபவை இசை திரிந்திசைப்பினும் அசைதிரியாமையைக் கண்டு கொள்க. |
இஃது ஆகுபெயர் முதலாய குறிப்புமொழிகளுள் அடங்காமையானும் இலக்கணவழக்குப் போலப் பயின்று வருதலானும் அகமும் புறமும் பற்றி ஓதப்பெற்ற இலக்கணங்களுள் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், வேந்தன், அகத்தோன், புறத்தோன் முதலானோரை ஒருமையாற் கூறியிருப்பினும் அவ்வொழுகலாற்றினை மேற்கொள்வார் யாவர்க்கும் அவ்விலக்கணங்கள் உரியவாம் என உரைத்தல் வேண்டுதலானும் சொல்லமைவும் பொருளமைவும் பற்றி ஒருங்கு கூறும் இவ்வியலின்கண் வைத்துக் கூறப்பெற்றதென்க. |
இதற்கு உரையாசிரியன்மார் கூறும் பொருள் குன்றக்கூறலாக உள்ளமையும் இன்றியமையாத இவ் இலக்கணவிதி அதனாற் பெறப்படாமையும் காண்க. |
ஏனை என்பது தத்தங் குறிப்பின் பொருள் தருவதோர் இடைச் சொல்லாகும் என்பதும் அஃது பால் வரைந்துணர்த்தாது என்பதும் ஏனது, ஏனைய என்பவை அச்சொல்லடியாகப் பிறந்த பெயர்ச்சொற்கள் என்பதும் எழுத்ததிகார உரையுள் கண்டு கொள்க. |
| சூ. 224 : | எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது |
| தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் |
(28) |
க - து : | அகப்பொருளின்கண் இன்பம் என்பது இதுவெனப் பொருள்மரபு கூறுகின்றது. |
பொருள் : இன்பமும் அறனும் பொருளுமென் றாங்கு (கள-1) எனப்பட்டவற்றுள் இன்பம் என்னும் நுகர்ச்சிதான் உடம்பும் உணர்வும் உடைய எல்லா உயிர்கட்கும் ஒன்றனொடுஒன்று பொருந்தி நிகழும் பெருநசையினை உடையதாகும். |
என்றது : ஈதல் முதலிய அறங்களானும் கல்வி, கேள்வி, தவம், நோன்பு முதலிய பொருள்களானும் எய்துவதும் இன்பமேயாயினும் அவ் இன்பம் மக்கட் பிறப்பினர்க்கன்றி ஏனைய உயிர்கட்கெல்லாம் பொதுவாகாமையான் ஈண்டு இன்பம் என்றது உணர்வான் ஒன்றி மெய்யுற்று நுகரும் இன்பமே என்றவாறு. |