பொருளதிகாரக்   கோட்பாடுகளை    முன்னர்     நோக்கிப்    பின்னர்
இவ்வுரைநூலைப் பயிலுதல்   பல   ஐயங்களைத்   தெளிவுறுத்தும்   என
நம்புகிறோம்.
 

மெய்ப்பாட்டியல்
 

மெய்ப்பாட்டியற் காண்டிகையுரையும்   முன்னைய    உரைகளில் காண
இயலாத   தெளிவையும்    புதிய     இன்றியமையாத    செய்திகளையும்
உள்ளடக்கியுள்ளது. இதன்  பாயிரஉரை   சுவை   என்னும்  'ரசம்' வேறு,
மெய்பாடு வேறு என்ற செய்தியை நன்கு விளக்கியுள்ளது.
 

"உணர்வுகளைச்  செய்யுள் வாயிலாக  அறிதற்குரிய மெய்ப்பாடு பற்றிய
இயல்,  மெய்ப்பாட்டியல்.   உரிப்பொருள்  முதலியவற்றைச்   செவ்விதின்
புலப்படுத்துவது  மெய்ப்பாடு  ஆதலின்  அதுசெய்யுள்  உறுப்புள்  ஒன்று.
மெய்ப்பாடு பொருள் புலப்பாட்டினைச் செய்வது. பொருள் புலப்பாட்டுக்குத்
துணை செய்யும் உவமம் திணைஉணர் கருவியேயாகும்.  ஆனால்  சுவைப்
பொருளின் அடிப்படையில் தோன்றும் மெய்ப்பாடு செய்யுள் உறுப்பாகும்.
 

நாடகம்  என்பது   கதை   தழுவி   ஆடப்பெறும்   பொருநர்   தம்
கூத்தினையும்   ஒருவரே   கதைமாந்தர்   பலரின்  பண்பு - செயல்களை
அவிநயத்தான்  ஆடிக்காட்டும்  கூத்தினையும்   குறிக்கும்.   இப்பொழுது
முன்னையது    நாடகம்   எனவும்   பின்னையது   நாட்டியம்   எனவும்
வழங்கப்படுகின்றன.   நாடகத்தில்  நடிப்பாலும் உரையாலும் புலப்படுத்தும்
உணர்வுகள் சுவை (ரசம்) ஆகும். நாட்டியத்தில் புலப்படுத்தும்  உணர்வுகள்
நாட்டியம் ஆடுவோர் மெய்யின்கண் தோன்ற  அவர்   ஆடுதலின் அவை
மெய்ப்பாடாகும்.   நாடகத்தில்     காணும்     அழுகைக்    காட்சியைக்
காண்போர் தாமும்   அழுவர்.   ஆனால்   அழுகையின்   அவிநயத்தை
நாட்டியத்தில்   காண்போர்   அஃது   அழுகைச்  சுவை  என்று அறிந்து
கோடலன்றித் தாமே அழுதலைச் செய்யார்.  எனவே  நாடக  உணர்வுகள்
சுவையாகும்.   நாட்டிய   உணர்வுகள்   மெய்ப்பாடாகும். செய்யுள  கத்து
அமையும் உணர்வுகள் ஒலிவடிவாயின் செவி வாயிலாகவும்  வரிவடிவாயின்
விழி  வாயிலாகவும்     அகத்தே   புலப்பாடாதலின்   சுவைப்பொருளின்
அடிப்படையில் பொருள் புலப்பாட்டினை   மெய்ப்பாடு   வெளிப்படுத்தும்.
மெய்ப்பாடு நாடகத் தமிழிற்குரிய  சுவை   உறுப்போடு   தொடர்புடையது.
ஆதலின்  "நாடக   நூலார்   சுவைக்கோட்பாடுகள்   மெய்ப்பாட்டியலின்
தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன" என்பது பாயிர உரைச் செய்தி.