எனக் கூறிய சூத்திரத்தான் முல்லை முதலாய நிலத்துவழி மருங்கிற்றோன்றி இயற்பெயர்க்குரியனவாக அமைந்த கருப்பொருள்களின் செயலும் பண்புமே 'இறைச்சியாக' வரும் எனப் புலப்படுத்தியமையான், எஞ்சிய அதன் இலக்கணத்தை ஈண்டுப் புலப்படுத்துவாராய் அது மக்கட்குரிய ஒழுகலாறாகிய உரிப்பொருளின் புறத்ததாக வரும் என்றார். |
நாடக வழக்கத்தானும் உலகியல் வழக்கத்தானும் ஓதப்பெறும் ஒழுகலாறுகள் எல்லாம் உயர்திணையாகிய மக்கட்கே உரிய பொருளாகும் என்பது நன்கு விளங்க 'உரி' (உரியபொருள்) என நூலோர் குறியீடு செய்து கொண்டாற்போல அஃறிணைப் பொருள் (கருப்பொருள்) களின்பால் நிகழும் பண்பும் செயலுமாகிய நடக்கைகளை 'இறைச்சி' எனக் குறியீடு செய்தனராவர். [இறை = தங்குதல். சி = விகுதிப் பொருள் விகுதி. இறு + ஐ = இறை, இறை + சி = இறைச்சி] |
பறவை விலங்கு முதலாயவற்றின் செயல்கள் ஒழுக்கம் எனப்படாமையான் உயர்திணை மாந்தர்க்குரிய ஒழுக்கமாகிய 'உரி' என்னும் குறியீட்டினைச் சுட்டி அதற்கு மறுதலையாயது என்பது விளங்க அஃறிணைப் பொருள்களின் செயலும் பண்புமாகிய நடக்கையை 'உரிப்புறத்தது' என்றனர் நூலோர். |
இறைச்சி என்பது கருப்பொருள்களின் நடக்கைகளைப் பற்றிய குறியீடு. அதனான் "இறை" என்னாது அதன் உடனுறைவு தோன்ற இறைச்சி என்றனர். இறைச்சியிடத்ததாகத் தோன்றும் உள்ளுறையை உடனுறை என்று குறியீடு செய்தனர் என அறிக. |
உள்ளுறை உவமம் குறிப்பாற்றோன்றும் சொல்லிலக்கண வகையைச் சார்ந்ததாயினும் அஃது அகப்பொருளுக்கே சிறந்துரிமையுடையதென்பது தோன்ற அதனைச் சொல்லதிகாரத்துள் வைத்து ஓதாமல் அகத்திணையியலுள் வைத்து, |
"உள்ளுறை யுவமம் ஏனையு வமமெனத் |
தள்ளா தாகும் திணையுணர் வகையே" |
எனவும் |
"உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் |
கொள்ளும் என்ப குறியறிந் தோரே" |
எனவும் தோற்றுவாய் செய்து அதன் இயல்பினை, |
"உள்ளுறுத் திதனொடு ஒத்துப்பொருள் முடிகென |
உள்ளுறுத் திறுவதை உள்ளுறை யுவமம்" |