இனி, உரையாசிரியர் கருப்பொருளாகிய நாட்டிற்கும், ஊர்க்கும், துறைக்கும் அடையாகி வருவது இறைச்சி எனக் கூறி "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று" என்னும் செய்யுளைக் காட்டி விளக்குதலான் கருப்பொருளின் பண்பும் செயலுமே இறைச்சி என்பது அவர் கருத்தாதல் புலப்படுகின்றது. |
நச்சினார்க்கினியர் "பொருட்புறத்ததுவே" எனப்பாடங் கொண்டு கருப்பொருட்கு நேயந்தான் கூறவேண்டுவதன் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மை யுடையது என்று விளக்குதலான் கருப்பொருளே இறைச்சி என்பது அவர் கருத்தன்று என்பது தெளியப்படும். எனினும் பொருளின் புறத்தே தோன்றும் என்னும் விளக்கம் மயக்கந் தருவதாக உள்ளது. அடுத்துப் பின்வரும் சூத்திரத்திற்கு அவர் கூறும் விளக்கம் மேலும் மயங்க வைத்தலாயுள்ளது. மற்று, அவரே 'உடனுறை' என்பதற்கு இறைச்சி எனப் பொருள் கூறுகின்றார். கலித்தொகைச் செய்யுள்கட்கு அவர் வரைந்துள்ள விளக்கங்களான் கருப்பொருள் பற்றிய நிகழ்ச்சிகளுள் தெளிவாக உள்ளுறை யுவமங்கோடற்கியலாதவற்றை எல்லாம் இறைச்சியாகக் கருதுகின்றார் என்பதும் இறைச்சியை உள்ளுறை உவமத்தின் ஒரு கூறாகவே கொள்கின்றார் என்பதும் தெரிகின்றன. இறைச்சி வேறு; உள்ளுறை உவமம் வேறு என்பதனை மேல் வரும் சூத்திரத்தானும் "உடனுறை உவமம்" என்னும் சூத்திர உரையானும் தெளியலாம். |
| சூ. 231 : | இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே |
| திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே |
(35) |
க - து : | இறைச்சியின்கண் உள்ளுறைப்பொருள் தோன்றலும் உண்டென்றும் அதனை உணருமாறும் பற்றிக் கூறுகின்றது. |
பொருள்: செய்யுட்கண் பொருளிலக்கண மரபானே இயலுமிடத்து இறைச்சியானது அதற்கு வண்ணனையாகி அதனைச் சிறப்பித்தலொடு ஆராய்வார்க்கு ஒரோவிடத்து அதனுட் பிறக்கும் உள்ளுறைப் பொருளும் உளவாகும். |
"திறத்தியல் மழிங்கின் தெரியு மோர்க்கே" என்பதற்குத் திறப்பாடுடைய இலக்கணத்தின் பக்கத்தான் ஆராய்வார்க்கு எனப் பொருள் கோடலுமாம். உம்மையான் உள்ளுறை பிறவாமல் வண்ணனையாகி நிற்றலே பெரும்பான்மை என்பது உணரப்படும். பொருள் என்றது உள்ளுறையை. அதனை உணரும் அருமைப்பாடு தோன்ற "தெரியுமோர்க்கே" என்றார். |