பொருளியல்243

பண்பும்   செயலுமாகிய   இறைச்சியொடு   ஒருங்குறைதலின்   உடனுறை
எனப்பட்டது. உடனுறை எனினும் இறைச்சியிற் பொருள்  எனினும்  ஒக்கும்.
இதன்  ஒண்பொருளை   நெகிழவிட்ட   உரையாசிரியன்மார்  இறைச்சியிற்
பொருளை இறைச்சிப்பொருள் எனவும் இறைச்சி எனவும்  வழங்கினமையின்
இறைச்சி என்பதே இதன் குறியீடாக நிலைத்து விட்டது.
 

எ-டு :

மேற்காட்டப்பெற்றன.
 

2) உவமமாவது :உவமப்போலி   எனப்    பின்னர்   உவமவியலுள்
விரித்தோதப்பெறும் உள்ளுறை  உவமமாகும்.  உவமமாகத்  தாம்  கருதிய
கருப்பொருள்களின் வண்ணனை உவமம்  போல  நின்று  (உவமேயமாகிய)
பொருளைத்   திரிபின்றி   விளக்குதலின்   அவ்   உள்ளுறை,   உவமம்
எனப்பட்டது.   உவம  உள்ளுறை  என்பதே  உள்ளுறை  உவமம்   என
இலக்கணக்  குறியீடாக   அமைந்து   உரையாசிரியன்மார்  வழக்காற்றான்
உள்ளுறை எனக்கடைக் குறையாக வழங்கப்படுகின்றது. பிற விளக்கங்களும்
எடுத்துக்காட்டுக்களும் உவமவியலுரையுட் கண்டு கொள்க.
 

3) சுட்டாவது :இறைச்சியிற்       பொருளாகிய       உடனுறையும்
உள்ளுறையுவமமும் போலாமல் வெளிப்படையாக ஒருவர் கூறும் கூற்றினுள்
கூறுவோர்   கருதும்    குறிப்புப்பொருள்    உள்ளுறையாக    அமைந்து
நிகழ்வதாகும். [சுட்டுதல் = கருதுதல்]
 

எ-டு :

பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்

கோடுலக்கை யாகநற் சேம்பின் இலைசுளகா

ஆடுகழை நெல்லை அறையுரலுட் பெய்துஇருவாம்

பாடுகம் வாவாழி தோழி நற்றோழி பாடுற்று"

(குறிஞ்சிக்கலி-5)
 

இதன்கண்  வளியசைத்தலான்  தானே   உதிர்ந்தநெல்  (ஆடுகழை  நெல்)
என்றது   இயற்கைப்   புணர்ச்சியானது   ஒன்றியுயர்ந்த  பாலதாணையான்
நிகழ்ந்தது   என்னும்   கருத்தையும்   'அறையுரல்'  என்றது  தலைவனே
நம்பால் வந்தாலன்றி நாம் அவன் உறைவிடத்துச் செல்லுதல் குடிமையாகாது
என்னும் கருத்தையும்  "வயக்களிற்றுக்  கோடு  உலக்கையாகக்  குற்றுவாம்"
என்றது தோலாத சொற்களான்  வரைவு  கடாதலைச்  செய்தல்  வேண்டும்
என்னும்  கருத்தையும்  'சேம்பின்  இலைசுளகா'  என்றது  நீ  செவிலிக்கு
அறத்தொடு நிற்றல் வேண்டும் என்னும்  கருத்தையும்  தலைவி  தோழிக்கு
உணர்த்தக் கருதினாளாக அமைந்திருத்தலை ஓர்ந்துணரலாம்.