இத்தலைவி கூற்றுச் சுட்டாக அமைந்து மேற்கூறிய உள்ளுறையைப் புலப்படுத்தலை. |
"இடியுமிழ்பு இரங்கிய விரவுப்பெயல் நடுநாள் |
கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்து |
...... ........ ........ ........ ........ ....... ........ ......... .. |
பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனைப் |
பாடுகம் வாவாழி தோழி நற்றோழி பாடுற்று" |
என்பதன்கண் அமைந்துள்ள உள்ளுறை உவமத்தின் பொருட் சார்பான் தெரிந்து கொள்க. |
இங்ஙனம் தலைவி கூறியவழி அதனைக் கேட்டதோழி தலைவனை இயற்பழித்து அவன் கொடுமை கூற நினைவாளாதலின் தோழி இயற்பழித்துக் கூறாமுன் தானே |
"இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே |
வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற |
சூள்பேணான் பொய்த்தான் மலை" என்றாள் என்க. |
இத்தாழிசைப் பகுதியும் சுட்டு என்னும் உள்ளுறைப்பொருள் அமைந்த கூற்றேயாகும். இதன்கண் அமைந்துள்ள கருத்தாவது : |
பிரிவாற்றாமையான் தலைவன் சூள்பொய்த்தான் எனக் கூறியதல்லது அவன் அறநெறிசான்ற பொருமையனே எனத் தோழிக்கு உணர்த்துதலாம். இதுவே தலைவி கருத்து என்பனைத் தோழி உணர்ந்து கொண்டாள் என்பதைப், |
"பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ |
அஞ்சலோம்பு என்றாரைப் பொய்த்தற் குரியனோ |
குன்றகல் நன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின் |
திங்களுள் தீத்தோன் றியற்று" என்றும் |
"வாரா தமைவானோ - நீருள் குவளை வெந்தற்று"என்றும் |
"துறக்குவன் அல்லன் - இருள் தோன்றியற்று" என்றும் |
தோழி தலைவனை ஏத்திக் கூறியதனான் அறிந்து கொள்க. பின்னர்த் தோழியின் முயற்சியான் வரைவு நேர்ந்தமையையும் அச்செய்யுளின் சுரிதகத்தான் தெரிந்து கொள்க. |
இவ் உள்ளுறை, கருப்பொருள்களின் செயலே பற்றிப் பிறவாமையான் உடனுறையாகாமையும் பொருளெதிர் புணர்த்து உவமங்கோடற்கு ஏலாமையான் உள்ளுறைஉவமம் ஆகாமையும் கண்டு கொள்க. |