பொருளியல்245

'சுட்டு'  என்னும்   இவ்   உள்ளுறையின்  நுண்மையை  ஓராமையான்
இங்ஙனம் வருவனவற்றையெல்லாம்  இறைச்சி  எனக்  கொண்டு  விளக்கம்
செய்து  போந்தனர்.   பின்னுரையாளர்   பலரும்   அப்   புணைவழியே
செல்வாராயினர்.
 

4) நகையாவது :எள்ளல் பற்றி  நகையாட்டாகப்  பேசும்  கூற்றினுள்
புலப்பாடாகும்   உள்ளுறைப்   பொருளாகும்.  ''பொருளொடு   புணர்ந்த
நகைமொழி'' (செய்-166)  எனச்  செய்யுளியலுள்  ஓதப்பெறும்  நகைமொழி
பெரும்பான்மையும் புறத்திணை  ஒழுகலாறு  பற்றியும்  அடிவரையறையற்ற
செய்யுள் வகையுள்ளும் உரைநடை வழக்காக நிகழும். உள்ளுறையாக வரும்
இந் நகைமொழி பாட்டு என்னும் செய்யுள் நடையுள் அமைந்து அகத்திணை
ஒழுகலாறு பற்றி வரும் என்க. எண்வகை மெய்ப்பாடுகளுள்  நகை என்னும்
மெய்ப்பாட்டிற்குரிய பொருள் நான்கனுள் பேச்சுப்பற்றி  நிகழ்வது 'எள்ளல்'
எனப்படும்.  ஒரு   கூறேயாதலின்  அதன்  வாயிலாகத்  தோன்றும்  இவ்
வுள்ளுறை 'நகை' எனப்பட்டதென்க.
 

எ - டு :

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்இல்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே

(குறு-8)
 

எனவரும்.
 

இதன்கண் தலைவி தானே தலைமை செய்து  கொண்டு  ஒழுகுகின்றாள்
எனத் தலைவியை இகழும்  முகத்தான்  தலைவன்  ஆடிப்பாவை  போலப்
புதல்வன்   தாய்க்கு  மேவன  செய்வானாயினன்   எனக்   காதற்பரத்தை
நகையாடிக்  கூறுகின்றாள்.  அக்  கூற்றினுள்  எம்மில்  பெருமொழி  கூறி
என்றதனான் புதல்வன் தாய்க்கு மேவன செய்து  நிற்றலும்  பொய்ம்மையே
என்பதும் ஏனைய இற்பரத்தையரும் அவன்மாட்டுக் காமுறுதலாற் பயனின்று
என்பதும்   உள்ளுறையாகத்   தோன்றி   நிற்பதைக்   "கழனி  மாஅத்து
விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்"  என்னும்  உள்ளுறை
உவமத்தின் சார்பானே அறிக. என்னை?
 

பழனவாளை  மாவினது  பழத்தைக்  கதுவிற்றேனும்  அதனாற்  பயன்
கோடல் அதற்கு முழுமையாக வாயாமையான் என்க.