246பொருளியல்

"திருந்திழாய்" என்னும் குறிஞ்சிக்கலிப் (29)  பகுதியுள்  நகை  என்னும்
உள்ளுறை தோன்றி நிற்குமாறு அறிக. என்னை? நகையாட்டாகப் படைத்துக்
கொண்டு கூறும் தோழி.
 

"இன்சாயல்  மார்பன்  குறிநின்றேன்   யானாக"  என்றதனான்  இரவுக்
குறிக்கண்  சேறல்   அரிது   என்பதும்   "கண்டே   கடிதரற்றிப்   பூசல்
தொடங்கினன்" என்றதனான் ஊரலர் தோன்றும்  என்பதும்  உள்ளுறையாக
நிற்றலைக் கண்டு கொள்க.
 

இதற்கு   விளையாட்டாயமொடு    (நற்-172)    என்னும்   செய்யுளை
எடுத்துக்காட்டி "அம்ம  நாணுதும்  நும்மொடு நகையே"  என  நகையாடிப்
பகற்குறி கொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக் கூறி மறுத்தவாறு  காண்க
என்பார் நச்சினார்க்கினியர். ஆண்டு நகை  என்னும் சொல்  புணர்ச்சியைக்
குறிப்பான் உணர்த்தி நின்றதல்லது. அது நகைமொழி யாகாமையறிக. மற்றும்
நகையாடற் பொருட்டாய  தொடர்மொழிக்கண்  இவ்வுள்ளுறை  தோன்றும்
என்பது இதன் இலக்கணமாதலன்றி நகைத்தலாகிய  வினையே  உள்ளுறைப்
பொருள்  தருமென்பது  பொருளன்று.  நகையே   உள்ளுறைப்  பொருள்
தருமெனின்  ஏனைய  அழுகை, வெகுளி முதலாயினவும் அக்குறிப்பினைத்
தருதலான் அவற்றையெல்லாம் கூறாமல் நகை ஒன்றனை மட்டுமே  கூறுதல்
குன்றக்கூறலாய்   முடியுமென்க.  இதற்கு  இளம்பூரணர்  கூறும்  விளக்கம்
சிறிதும் ஒவ்வாமை வெளிப்படை.
 

5) சிறப்பாவது :உடனுறை  முதலாய  நான்கினும்  வேறாகக்,  கூற்று
நிகழ்த்தும்  மாந்தர்   முன்னிலையாக   இருந்து  கேட்போரை  யாதானும்
ஒருவகையிற் சிறப்பித்துக் கூறுதற்கண் அமைந்து வருவதாகும்.
 

அங்ஙனம்   முன்னிற்பவரைச்    சிறப்பித்துக்    கூறும்    அச்சிறப்பு
மொழிகள் இயற்கையாகவன்றிச் செயற்கையாக  வலிந்து  கூறப்படுவனவாகப்
புலப்படுமிடத்து  இவ்வுள்ளுறை  தோன்றும்.  இது  மேற்கூறிய  உடனுறை
முதலாய நான்கனுள்   அடங்காமல்   அவற்றின்   வேறுபட்டுச்   சிறப்புக்
கூற்றின்கண் வருதலின் சிறப்பென்னும் குறியீடு பெற்றதென்க.
 

எ - டு :

சன்மதி, சிறக்கநின் உள்ளம், நின்மலை

ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை

சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ

முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை

எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல்