நச்சினார்க்கினியர் உள்ளுறை உவமங்கோடற்கு உரியவாக நிகழும் ஏனை உவமங்களைக் காட்டிச் சிறப்பு என்னும் உள்ளுறை என்பார். அஃதாவது உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து நிற்றலான் சிறப்பாயிற்று என்பார். அஃது ஆசிரியர் கருத்தாயின் 'சிறப்பு' என்பதை உள்ளுறையின் ஒரு வகையாக ஓதுதலும் 'ஐந்தே' எனத் தொகை கூறலும் பிழையாதலொடு ஏனையுவமமும் உள்ளுறைப் பொருளைத்தரும் எனப்பட்டு மயக்கஞ் செய்யுமென்க. |
இவ் ஐவகை உள்ளுறைகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் வருமாறு: |
ஒற்றுமை :இவை ஐந்தும் அகத்திணை மாந்தர்க்குரிய கூற்றாகச் செய்யுட்கண் அமைந்து வரும். |
வேற்றுமை :1) உடனுறை : கருப்பொருள்களின் பண்பினையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு உவமமும் பொருளுமாக இயைத்துக் கூறுதற்கு ஏலாமல் திறத்தியல் மருங்கின் தெரியுமோர்க்கே புலப்பட்டு வரும். |
2) உள்ளுறையுவமம் :உவமும் பொருளுமாக ஒப்பிட்டுக் கூறுதற்கு ஏற்புடைத்தாகித் தெய்வ மொழிந்த கருப்பொருள்களின் அடிப்படையில் வினை, பயன், மெய், உரு, பிறப்பு என்னும் வகைப்பாடு தோன்றத் தெற்றெனப் புலப்பட்டு வரும். |
3) சுட்டு :இறைச்சிப் பொருள் போலச் சொற்றொடரொடு உடனுறைவு ஆகாமல் வரையறையின்றி யாதானும் ஒரு பொருள் பற்றிக் கூறும் கூற்றினுள் கூறுவோர் தம் கருத்தாகக் கொள்ளுமாறு நுண்ணிதாக அமைந்து வரும். |
4) நகை :முதற்பொருள், கருப்பொருள் என்னும் அடிப்படையைக் கருதாமல் எள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு நகையாட்டாக நிகழும் கூற்றினுள் குறிப்பாக அமைந்து வரும். |
5) சிறப்பு : கருப்பொருளை அடிப்டையாகக் கருதாமல் ஒருவரைச் செயற்கையாகச் சிறப்பித்துப் பாராட்டிக் கூறும் கூற்றினுள் நுட்பமாக அமைந்து வரும். |
சுட்டு, நகை, சிறப்பு என்னும் இவ்வுள்ளுறைகளை இலக்கிய உரையாசிரியன்மார் பலரும் செய்யுளுள் அமைந்த நயமாகக் கருதி விளக்கம் கூறிச் சென்றமையான் இவ் இலக்கணக் கூறுகள் புலப்படாமலும் வழக்கிழந்தும் போயின. இக்காலத் திறனாய்வாளர் பலர் இவற்றை நுண் பொருளாக விளக்கிக் கூறுவர். |