284மெய்ப்பாட்டியல்

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

(குறள்-783)
 

எனவும் வரும். இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும்.
 

4. விளையாட்டாவது : உள்ள  மொத்தாரொடு  கூடிச்  சோலைபுக்கு
விளையாடலும்,  குரவை  முதலிய   ஆடலும்,  இகலின்றிப்  புரியும்  வீர
விளையாட்டுமாம்.
 

எ - டு :

மேவர, நான்மாடக்கூடல், மகளிரும் மைந்தரும்

தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார்

ஆனா விருப்பொடு அணியயர்ப, காமற்கு

வேனில் விருத்தெதிர் கொண்டு

(கலி-92)
 

எனவும்
 

வையை வருபுனல் ஆட லினிதுகொல்

செவ்வேற்கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்

(பரிபாடல் திரட்டு)
 

எனவும் வரும்.
 

துயிலின்றி யாம்நீந்த தொழுநையம் புனலாடி

மயிலியலார் மருவுண்டு மறந்தமைகுவான் மன்னோ

(கலி. 30)
 

என்பது  காட்டுவார்  பேராசிரியர்.  இன்னோரன்ன அல்லல் நீத்த உவகை
எனற் கேலாமை கண்டு கொள்க.
 

இம்முப்பத்திரண்டு பொருளும் நாடகச் சுவைக்கும் உரிமையுடையனவாய்
நகை   முதலாய    எண்வகை    மெய்ப்பாடுகட்குச்   சிறப்புடையனவாய்
அகத்திற்கும்  புறத்திற்கும்   பொதுவாய்  அமைந்து  வருதலின்  இவற்றை
முதற்கண்விதந்தோதினார் என்க.
 

சூ. 261 :

ஆங்கவை ஒருபா லாக ஒருபால்

உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல்

தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாக்

கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்

நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனா

முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை

கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக்

கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை

வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ

அவையும் உளவே அவையலங் கடையே

(12)
 

க - து : 

அகத்திற்கும்   புறத்திற்கும்   பொதுவாக   வரும்.  மேற்கூறிய
முப்பத்திரண்டு   பொருள்களேயன்றி    அவையல்லாதவிடத்து
எண்வகை   மெய்ப்பாட்டிற்குரிய    பொருளாக   இவையுமுள
என்கின்றது.