மற்று ஈண்டுக் கூறப்பெற்றுள்ள வியர்த்தல், தன்மை, விரைவு, வாழ்த்தல், நாணுதல், உயிர்ப்பு, கையாறு, முனிதல், ஆராய்ச்சி, ஐயம் முதலியவாக வருவனவற்றொடு பின்னர் அகத்திணைக்குரியவாக ஓதப் பெற்றவனவற்றுள் வரும், பொறிநுதல் வியர்த்தல் இல்வலியுறுத்தல், பாராட்டெடுத்தல், அலர் நாணல், புலம்பித்தோன்றல், கையறவுரைத்தல், இன்பத்தை வெறுத்தல், ஏதமாய்தல், ஐயஞ் செய்தல் முதலியவை ஒத்தனவாக உள்ளமையின் இங்ஙனம் ஈரிடத்துங்கூறியது என்னை யெனின்? அவ்வாறு வருவன ஒருபுடை ஒக்குமேனும் அகத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் உடைமை, இன்புறல் முதலிய பொருள்பற்றிக் கூறாமல் புகுமுகம்புரிதல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டுமென்பதும் புறத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் புகுமுகம் புரிதல் முதலாய அகத்திணைக்கே உரியபொருள் பற்றிக்கூறாமல் உடைமை, இன்புறல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும் எள்ளல் இளமை முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டும் என்பதும் அறிவித்தற்கென்க. |