286மெய்ப்பாட்டியல்

பொருள் :எண்வகை   மெய்ப்பாடுகட்கும்  அடிப்படையாக  எள்ளல்
முதலிய    முப்பத்திரண்டு   பொருளும்   ஒரு    பகுப்பாகி    அமைய
அவையல்லாதவிடத்துப்   பிறிதொரு   பகுப்பாக   உடைமை,   இன்புறல்
முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும்.
 

இவை, உடைமையின்புறல், நடுவுநிலையருளல் என்றாற்  போல ஒருங்கு
எண்ணுதற்கு  ஏற்ப   நிற்றலான்  இவற்றை  முப்பத்திரண்டாக  எண்ணிக்
கோடல்  வேண்டுமென   உணர்ந்த   ஆங்கவை  ஒருபாலாக  (ஈங்கிவை)
ஒருபால் எனக்கூறினார் ஆசிரியர் என்க.
 

அவையும்  என்னும்  எச்சவும்மை  அவற்றின்  சிறப்பின்மை  தோன்ற
நின்றது. உயிர்ப்பெனாஅ, நடுக்கெனாஅ என்பவை  செய்யுளிசை  நிறைக்க
வந்த அளபெடை. எனா என்பவை எண்ணின்கண் வந்தன.
 

1. உடைமையாவது :   மேற்கூறிய    துய்க்கப்படும்    செல்வத்தின்
வேறுபட்டுப் பிறவாக வரும் கிழமைப் பொருள்களாம்.
 

எ - டு :

நெடுநல் யானையும் தேரும் மாவும்

படையமை மறவரும் உடையம்யாம்

(புற-72)
 

எனவரும்.
 

மயக்ககுறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே

(புற-188)
 

என்பதுமது. இவற்றைச் செல்வமாகக் கருதிய வழி உவகைக்குரிய பொருளாக
அமையும்.
 

இஃது  உவகை  என்னும்  மெய்ப்பாட்டிற்குப்  பொருளாக  அமையும்.
ஈண்டு  இம்முப்பத்திரண்டு  பொருள்கட்கும்  மெய்ப்பாட்டுரிமை  கூறுதல்
பெரும்பான்மை   பற்றி   என   உணர்க.  சிறுபான்மை  வேறுபடவரினும்
ஆராய்ந்து கொள்க.
 

2. இன்புறலாவது :தமது  உடைமைகளையும் செயல்களையும்  பற்றித்
தாமே எண்ணி மகிழ்தல்.
 

எ - டு :

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொற் கேளா தவர்

(குறள்-66)
 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கண் ணவர்

(குறள்-228)
 
எனவரும்.
 

இதுவும் உவகைக்குப் பொருளாக அமையும்.
 

3. நடுவுநிலையாவது :தமரெனக்  கோல் கோடாது பிறரெனக் குணங்
கொல்லாது நிற்கும் நயனுடைமையாகிய தகவு.