288மெய்ப்பாட்டியல்

பெருமுலை யலைக்கும் காதின் பிணர்மோட்டு

உருகெழு செலவின் அஞ்சுவருபேய் மகள்

(முருகு-50-51)
 

என்புழிப் பேய்மகளின் தன்மை புலப்பட்டவாறு காண்க.
 

ஈண்டிஃது அச்சத்திற்குப் பொருளாக அமைந்தது.
 

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு ..............

துனியில் காட்சி முனிவர்

(முருகு-126, 137)
 

இதன்கண் முனிவர்  தம்  தன்மை  புலப்படுமாறும்  அது  மருட்கைக்கும்,
பெருமிதத்திற்கும் பொருளாக அமையநிற்குமாறும்  கண்டு கொள்க. தன்மை எண்வகை மெய்ப்பாட்டிற்கும் பொருளாதற் குரியதாகும்.
 

6. அடக்கமாவது :செல்வமும் ஒளியும் மிகினும், இகலும்  இகழ்ச்சியும்
நேரினும்   பொங்காது    நிற்கும்   பொறையும்   உயர்ந்தோர்  மாட்டுப்
பணிந்தொழுகும் ஒழுக்கமுமாம்.
 

எ - டு :

'கேட்டல் மாத்திரை யல்லது' என்னும் புறப்பாட்டினுள்

தன்பெயர் கிளக்குங் காலைத் தன்பெயர்

பேதைச் சோழன் என்னும்

(புறம்-216)
 

இதன்கண் கோப்பெருஞ்சோழன் அடக்கம் புலப்படுமாறு காண்க.
 

ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழு மூரே

(புறம்-191)
 

என்பதுமது. இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

7. வரைதலாவது :இன்னது  செய்வல்   இன்னது   தவிர்வல்   என
நியமித்துக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம்.
 

எ - டு :

பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே

பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ

நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
 

எனவரும்.
  

8. அன்பாவது :தொடர்புடையார்  மாட்டும்,  நட்டார்  மாட்டும்  தம்
விருப்புடைய பொருள்கள் மாட்டும் செலுத்தும் கைம்மாறு கருதாத நேயம்.
 

எ - டு :

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத் தடக்கிச்

சாதல் நீங்க எமக்கீத் தனையே

(புறம்-91)
 

இதன்கண் கைம்மாறு கருதாத அதியமான் அன்பு புலப்பாடாதல் காண்க.
 

இருமருப் பெருமை ஈன்றணிக் காரான்

உழவன் யாத்த குழவியின் அகாலாது

பாஅல் பைம்பயிர் ஆரும்

(குறுந்-181)
 

எனவும் வரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.