12. வாழ்த்தலாவது :உலகநலங் கருதி இறையையும் தெய்வ முதலாயவற்றையும் போற்றுதல். |
| எ - டு : | வாழி யாதன் வாழி யவினி நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க |
(ஐங்-1) |
| திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர் தார்ச்சென்னிக் குளிர்வெண் குடைபோன்றிவ் அங்கண் உலகளித் தலான் |
(சிலம்பு-கடவுள் வாழ்த்து) |
என வரும். "நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க" என்பதுமது. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
13. நாணலாவது :சான்றோர் பழிப்பனவற்றை ஏலாமையும் புரியாமையுமாம். தன்புகழ் கேட்டவழி எய்தும் மென்மையும் இதன்கண் அடங்கும். |
| எ - டு : | தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள்வடக் கிருந்தனன் |
(புறம்-65) |
எனவும் |
| வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி யானது பெயர்த்தனெ னாகத் தானது சிறிதுஎன உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்களிறு நல்கி யோனே |
(புறம்-394) |
எனவும் |
| ............... மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக்கூறி நின்யான் பிழைத்தது நோவாய், என்னினும் நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே |
(புறம்-43) |
எனவும் |
தம்புகழ் கேட்டார் போல்தலை சாய்த்து மரந்துஞ்ச (கலி-119) எனவும் வரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
14. துஞ்சலாவது : செயலூக்கமின்றிப் புலனொடுங்கிக் கிடத்தல். உறக்கமெனினும் ஒக்கும். |
| எ - டு : | சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி அந்தணர் அருங்கட னிறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் |
(புறம்-2) |
எனவும் |
| நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று முன்றிற் போகா முதிர்வினள் யாயும் |
(புறம் 159) |
எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
15. அரற்றாவது : அறிவொடுபடாது வெருவுதலும் உறக்கத்தின்கண் வாய் சோர்தலுமாம். |