மெய்ப்பாட்டியல்
எ - டு :

கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தீத்
திண்டேர் அண்ணல் நிற்பா ராட்டிக்
காற்ந் பெருமையிற் கனவின் அரற்றும்என்
காமர் நெஞ்சம்

(புறம்-198)
 

எனவரும். இது மருட்கைக்கும் உவகைக்கும் பொருளாக அமையும்.
 

16. கனவாவது :உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு.
 

எ - டு :

கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து

(அக-170)
 

எனவரும். இது பெரும்பான்மை  உவகைக்கும் சிறுபான்மை  மருட்கைக்கும்
ஏனையவற்றிற்கும் பொருளாக அமையும்.
 

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை
நனவிற்றான் செய்தது மனத்த தாகலின்
கனவிற் கண்டு கதுமென வெரீஇப்
புதுவ தாக மலர்ந்த வேங்கையை
அதுவென உணர்ந்ததன் அணிநலம் முருக்கிப்
பேணாமுன் பின்தன் சினந்தணிந்து அம்மரம்
காணும் பொழுது நோக்கல் செல்லாது
நாணி இறைஞ்சும்

(கலி-49)
 

இதன்கண்  வெகுளிக்கும்   நாணி   இறைஞ்சும்  என்பதனால்  நகைக்கும்
பொருளாயினமை கண்டு கொள்க.
 

17. முனிதலாவது : உளம்   கொள்ளாவழியும்   மாறுபட்ட   வழியும்
எய்தும் வெறுப்பு.
 

எ - டு :

................ தாங்கருங்காவலன்
காணா தீத்த இப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்

(புற-208)
 
எனவும்
 

கந்துமுனிந் துயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
காலியற் புரவி ஆலும்ஆங்கண்

(புற-178)
 

எனவும் வரும். இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும்.
 

18. நினைத்தலாவது :ஒன்றனது   பயனை     விரும்பி    அதனை
இடைவிடாது எண்ணுதல். கழிந்ததனை மீள எண்ணுதலுமாம்.
 

எ - டு :

எந்தை வாழி ஆத னுங்கஎன்
நெஞ்சந் திறப் போர் நிற்காண்குவரே

(புற-175)
 
எனவும்
 

நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண

(புற-164)