| கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும் |
| திருநுதற் கில்லை யிடம் |
(குறள்-1123) |
என்பது தலைவன் நோக்கிற் றலைவி புகுந்தது. |
| கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் |
| எழுதேம் கரப்பாக் கறிந்து |
(குறள்-1127) |
என்பது தலைவி நோக்கிற் றலைவன் புகுந்தது. பிறவும் சான்றோர் செய்யுள் நோக்கி அறிந்து கொள்க. |
2. பொறிநுதல் வியர்த்தலாவது :தலைவன் தன்னை நோக்கிய வழி அக்காதல் வெம்மையான் உட்கும் நாணும் ஓங்குதலின் தலைவி வியர்பொறித்த நுதலினளாதல். தலைவற்கு உட்குத் தோன்றாதாதலின் இஃது தலைவிக்கே உரிய பொருள் என அறிக. எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க. இஃது மருட்கைக்கும் அச்சத்திற்கும் பொருளாக அமையும். |
| "பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் |
| உறுவளி யாற்றச் சிறுவரை திறவென" |
(அக-136) |
என்பது கற்பிற்குறித்தாகலின் ஈண்டைக்கு ஏலாதென்க. |
3. நகுநய மறைத்தலாவது :தலைவி தன் காதலை வெளிப்படுத்தும் உள்ளுணர்வாற்றோன்றும் முறுவலை மறைத்தல். நயம் - விருப்பம். நயநகை என்பது முன்பின்னாக மாறி ஒருசொல்நீர்மைத்தாய் நின்றது. இதுவும் தலைமகட்கே உரியதாகும். |
| எ - டு : | முகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை |
| நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு |
(குறள்-1274) |
இது பெருமிதத்திற்கும் உவகைக்கும் பொருளாக அமையும். |
4. சிதைவு பிறர்க்கின்மையாவது :நகுநயம் மறைத்த வழியும் தலைவனது குறிப்பானும் செயலானும் கிளர்ந்தெழும் காதலுணர்வான் எய்தும் உள்ளச் சிதைவினைப் புறத்தார்க்குப் புலப்படா வண்ணம் தலைவி தன் நெஞ்சினை நிறுத்துதல். பிறர் என்றது ஈண்டுத் தலைவனும் ஆயமுமாம். |
| எ - டு : | கரப்பினும் கையிகந் தொல்லாநின் உண்கண் |
| உரைக்க லுறுவதொன் றுண்டு |
(குறள்-1271) |
எனத் தலைவன் கூறுதலான் தலைவி உளஞ்சிதைந்தவாறும் அவளதை மறைக்கலுற்றவாறும் கண்டு கொள்க. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |