மெய்ப்பாட்டியல்

3. ஊழணி தைவரலாவது :மங்கல    மகளிர்க்குரிய   அணிகளாகிய வளை தொடி விரற்செறி  முதலியவை  தன்மேனி  மெலிவானே நெகிழ்வன
போலக்கருதும் உணர்வான் அவற்றைச் செறிக்கும் முயற்சியான் தைவருதல்.
மங்கல   மகளிர்க்கென   வகுத்துக்   கொள்ளப்  பெற்றமையான்  வளை
முதலாயவற்றை  ஊழணி  என்றார்.  ஊழ்-நியதி.  இதுவும்  இளிவரலுக்குப்
பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க.
 

4. உடைபெயர்த்துடுத்தலாவது :செறித்துப்  பிணிக்காத   மேலாடை,
இடைசூழ்   மேகலை   முதலியவற்றைத்   திருந்த   உடுத்தல்.   இதுவும்
இளிவரலுக்குப் பொருளாக அமையும்.  எடுத்துக்காட்டு  வந்துழிக்  காண்க.
இவை நான்கும் இம்முறையே நிகழ்தலான் ஊழி  நான்கே என்றார். ஊழ் -
முறைமை.
 

புகுமுகம் புரிதல் முதலாகிய இவ்எட்டும் களவியலிற்  கூறிய  வேட்கை,
ஒருதலையுள்ளுதல்,    மெலிதல்    என்பவற்றிற்கும்,   நன்னயமுரைத்தல்
நகைநனியுறாஅ, அந்நிலையறிதல், மெலிவு விளக்குறுத்தல் என்பவற்றிற்கும்,
மெய்தொட்டுப்பயிறல்,      பொய்பாராட்டல்,       மறைந்தவற்காண்டல்
முதலியவற்றிற்கும்  உரியவாக  நிகழும்   மெய்ப்பாட்டுப்   பொருள்களாக
அமையும்.  இவை  நான்கும்  வந்த  செய்யுளாகப்  பேராசிரியர்  காட்டும்
மேற்கோள்.
 

விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன்

கண்ணின் நோக்கிய தல்லது தண்ணென

உரைத்தலு மில்லை மாதோ அவனே

வரைப்பாற் கடவுளு மல்லன் அதற்கே

ஓதி முந்துறக் காதொன்று ஞெகிழ

நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத்

துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே

நீயறி குவையதன் முதலே

யாதோ தோழி யதுகூ றுமாறே.
 

என்பதாகும்.
 

இதுவும் உரைக்கேற்ப யாத்த பாடலாகும்.
 

சூ. 264 :

அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்

இல்வழி யுறுத்தல் இருகையு மெடுத்தலொடு

சொல்லிய நான்கே மூன்றென மொழிப

(15)
 

க - து :
 

அல்குல்தைவரல்  முதலிய   நான்கும்   மூன்றாங்    கூறு
என்கின்றது.
 

பொருள் :அல்குல்   தைவரல்,    அணிந்தவை    திருத்தல்,   இல்
வலியுறுத்தல்,   இருகையுமெடுத்தல்   என்று   சொல்லப்பட்ட   நான்கும்
மூன்றாங் கூறு என மொழிவர் ஆசிரியர்.