செற்றார் போல்நோக்கும் உடையவளாய், ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்கித் தன் இற்பிறப்பின் மாண்பினைத் தலைவி வலியுறுத்தலாம். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக்காண்க. |
4. இருகையுமெடுத்தலாவது :தலைவன் தன்னைத் தழுவும் குறிப்பொடு நெருங்குமிடத்து நாணம் மீதூர்தலான் தன் முகத்தினை மறைத்துக் கொள்ளும் கருத்தொடு கைகளை முகம் நோக்கி எடுத்தல், களவியலுள் 'இடையூறு கிளத்தல்' என்னும் கிளவிக்குரியவாய் நிகழும் மெய்ப்பாட்டுப் பொருள் இதுவென்க. இதனை இடைக்காலத்தார் "நாணிக்கண்புதைத்தல்" என்பர். இதற்குப் பேராசிரியர் கூறும் விளக்கம் நாணுடைய மகளிர்க்கு ஒவ்வாமையறிக. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க. |
இவை நான்கும் கூடுதலுறுதற்கு நிமித்தமாகலின் இவற்றின் பின் இயற்கைப்புணர்ச்சி நிகழுமென்க. எனவே புகுமுகம் புரிதல் முதல் இருகையுமெடுத்தல் இறுதியாக உள்ள பன்னிரண்டும் புணர்ச்சிக்கு முன் நிகழும் "மன்னிய வினைய நிமித்தமாம்" என்பது புலனாகும். |
| சூ. 265 : | பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல் |
| ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் |
| கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ |
| எடுத்த நான்கே நான்கென மொழிப |
(16) |
க - து : | பாராட்டெடுத்தல் முதலியவை நான்காம் கூறு என்கின்றது. |
பொருள் :பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பது உட்படக் கூட்டிக் கிளந்து சொல்லிய நான்கு பொருளும் நான்காம் கூறு என மொழிவர் ஆசிரியர். |
இவை களவியலுள் கூறிய தெளிவகப்படுத்தல் (கள-10) சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் (கள-11) நொந்து தெளிவொழிப்பினும், அச்சம் நீடினும், தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும், களவறிவுறினும் எனவரும் கிளவி முதலியவற்றிற்கு உரியவாக நிகழும் மெய்ப்பாடுகட்குரிய பொருள்களாகும் என்பது தோன்ற "எடுத்த நான்கு" என்றார். |
1. பாராட்டெடுத்தலாவது :புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தனது ஆராக் காதலுணர்வு மாறாமை விளங்கத் தலைவியின் நல முதலியவற்றைப் பரக்கப் பேசுதல். |