| எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் |
| தனிக்குரு குறங்குந் துறைவற்கு |
| இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே |
(ஐங்-144) |
இதன்கண் தலைவற்கு வரைவு கடாதல் முகத்தான் தலைவி கூறி மடனழிய நின்றவாறு கண்டு கொள்க. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
3. ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலாவது : நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் மாறுபட்டமையானும் அறிமடம் நீங்கிய உரையானும் தலைவியைச் செவிலியும் நற்றாயும் ஐயுற்றவழிக் கூறும் கடுஞ்சொற்களை மறாது ஏற்றுப் புறத்தார்க்கு இது புலனாங்கொல் எனக் கருதித்தலைவி நாணுதல். |
இனி, நசையிலாப் பழிச்சொற்களை ஏற்றிக் கூறும் அம்பல் மகளிரின் அலருக்கு நாணுதல் எனப்பொருள் கோடலுமாம். இப் பொருட்கு "ஏற்றலர்" என்பது வினைத்தொகை மொழியாகும். |
| எ - டு : | யானே ஈண்டைய னேஎன் னலனே |
| ஆனா நோயொடு கான லஃதே |
| துறைவன் தம்மூ ரானே |
| மறைய லராகி மன்றத் தஃதே. |
(குறு-97) |
எனவும் |
| கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி |
| அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச் |
| சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே |
| வாய்க்கதில் வாழி தோழி ..... |
(அக-347) |
எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
4. கொடுப்பவை கோடலாவது : தலைவனாற் கொடுக்கப்பெறும் தழையும் கண்ணியும் தாரும் மாலையும் ஆகிய கையுறைகளை ஏற்றுக்கோடல். |
| எ - டு : | பெரும்புலர் விடியலின் விரும்பப் போத்தந்து |
| தழையுந் தாரும் தந்தனள் இவன்என |
| இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத் |
| தைத்திங்கள் தண்கயம் படியும் |
| பெருந்தோட் குறுமகள் ..... |
(நற்-80) |
எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
"எடுத்த" என்றதனான் கொடுப்பவை கோடற்குத் தடுமாறலும் இதன்கண் அடங்குமெனக் கொள்க. அவ்வழி அஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும். |