2. திளைப்புவினை மறுத்தலாவது : தலைவனது வருந்தொழிற் கருமையும் இடையூறும் எண்ணித் தலைவி வரைவு கடாதற் கருத்தினான் இருவகைக்குறிக்கண்ணும் இடையீடு செய்து கூட்டத்தைத் தவிர்த்தலாம். தவிர்த்தலை மறுத்தல் என்றார். |
| எ - டு : | கருங்கற் கான்யா றருஞ்சுழி வழங்கும் |
| கராஅம் பேணாய் இரவரின் |
| வாழேன் ஐய மைகூர் பனியே |
(நற்-292) |
எனவும் |
| குடிமுறை புரக்கும் நெடுமலை நாட |
| உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும் |
| இரவின் அஞ்சாய், அஞ்சுவல் இரவின் |
| ஈரளைப் புற்றம் காரென முற்றி |
| இரைதேர் எண்கினம் அகழும் |
| வரைசேர் சிறுநெறி வாரா தீமே |
(நற்-336) |
எனவும் வரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும். |
3. கரந்திடத் தொழிதலாவது :தலைவனைக் கண்டவழி உளந்தடுமாறு மென அஞ்சி அவன் காணாவகையிற் கரந்து மனையிடத்து அடங்கி அவனின் நீங்கியிருத்தல். ஒழிதலாவது தலைவன் வழியமையாது தவிர்த்தல். தங்குதல் எனக் கருத்துப் பொருள் கூறுவர் உரையாசிரியன்மார். அது சொற் பொருளாகாமை எழுத்ததிகாரத்து விளக்கப்பட்டது. |
| எ - டு : | யாவதும் அறிகிலர் கழறு வோரே |
| தாயில் முட்டை போல உட்கிடந்து |
| சாயின் அல்லது பிறிதெவன் உடைத்தே |
| யாமைப் பார்ப்பின் அன்ன |
| காமங் காதலர் கையற விடினே |
(குறு-152) |
எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
4. கண்டவழி உவத்தலாவது : கரந்துறைதலால் ஆற்றாமைமிக்கு வருந்திப் புலம்பியிருக்குங்கால் தலைவன் 'புகாஅக் காலை புக்கெதிர் பட்டுழியும் பகாஅ விருந்தின் பகுதியாய வழியும்' (கள-17) கண்டு பெருங் களிப்புறுதல். |
| எ - டு : | உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் |
| கள்ளுக்கில் காமத்திற் குண்டு |
(குறள்-1281) |
இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |