மெய்ப்பாட்டியல்

5. பசியட நிற்றலாவது :  பசிவருத்தவும்     அதனைக்     களைய
முற்படாமல் உணவை வெறுத்திருத்தல்.
 

எ - டு :

இனியான், உண்ணலும் உண்ணேன்

வாழலும் வாழேன் ...........

(கலி-23)
 
எனவரும்.
 

அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகன்

பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு

நனிபசந் தனள்என வினவுதி ...........

(அகம்-48)
 

என்பதுமது. இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

6. பசலை பாய்தலாவது :பிரிவாற்றாமையான்  மாமைக்கவின்   மாறி
மேனி பசப்பூர நிற்றல். (பாய்தல்-பரவுதல்)
 

எ - டு :

யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப

இரும்பல் கூந்தல் திருந்திழை யரிவை

திதலை மாமை தேயப்

பசலை பாயப் பிரிவே தெய்யோ

(ஐங்-231)
 

எனவரும். இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

7. உண்டியிற் குறைதலாவது :தாயர் பரிந்து  உணவு  ஊட்டிய  வழி
நனி உண்ணாது கழியவும் குறைத்துண்ணுதல்.
 

எ - டு :

தீம்பா லூட்டினும் வேம்பினும் கைக்கும்

வாராய் எனினும் ஆர்வமொடு நோக்கும்

நின்னிற் சிறந்ததொன் றிலளே

என்னினும் படாஅள் என்னிதற் படலே

(பேரா-மேற்)
 

இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

8. உடம்புநனி சுருங்கலாவது ;பசியட    நிற்றலானும்    உண்டியிற்
குறைதலானும் மேனி மெலிவுறுதல்.
 

எ - டு :

யாமெங் காதலர்க் காணே மாயின்

செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

கல்பொரு சிறுநுரை போல

மெல்ல மெல்ல இல்லா குதுமே

(குறு-290)
 

எனவரும். இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

9. கண்துயில் மறுத்தலாவது : உடம்பு சோர்வுற்ற காலையும் உள்ளம்
உறங்க ஒருப்படாமையின் கண் துஞ்சாதிருத்தல்.
 

எ - டு :

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து

இனிதடங் கினரே மாக்கள் முனிவின்றி