314மெய்ப்பாட்டியல்

நனந்தலை யுலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே

(குறு-6)
 

எனவரும். இஃது அவலத்திற்குப் பொருளாக அமையும்.
 

10. கனவொடு மயங்கலானது :     தன்னுணர்வின்றி       ஒருகால்
துயிலெய்திய வழி நேர்ந்த கனவிடத்துக்   காதலனைக்   கண்டு   களித்து,
விழித்த விழிக் காணாமையின் கலங்குதல்.
 

எ - டு :

கோதை கோலா, இறைஞ்சி நின்ற

ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்

யாதென் பிழைப்பென நடுங்கி ஆங்கே

பேதையைப் பெரிதெனத் தெளிப்பான் போலவும்

கனவினாற் கண்டேன் தோழி காண்தக

(கலி-128)
 

எனவரும்.  இது  மருட்கைக்கும்  அவலத்திற்கும்  பொருளாக  அமையும்.
இச்செய்யுள் கற்பிற்குரியது. கனவு என்ற முறையில் ஈண்டுத் தரப்பட்டது.
 

11. பொய்யாக் கோடலாவது :தலைவன்    தண்ணளி    செய்யவும்
பிரிவச்சத்தான் அதனைப் பொய்யாகக் கற்பித்துக் கொண்டு இனைதல்.
 

எ - டு :

கனவினான் எய்திய செல்வத் தனையதே

ஐய எமக்குநின் மார்பு

(கலி-68)
 

எனவும்
 

வானின் இலங்கு மருவித்தே தானுற்ற

சூள்பேணான் பொய்த்தான் மலை

(கலி-41)
 

எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

12. மெய்யே என்றலாவது :தலைவன்     மாட்டுப்     பொய்ம்மை
நிகழினும்  தன்  காதன்  மிகுதியான்  அதனை  மெய்ம்மையாகக்  கருதிக்
கொள்ளுதல்.
 

எ - டு :

கானங் காரெனக் கூறினும்

யானோ தேறேன் அவர்பொய் வழங்கலரே

(குறு-21)
 

எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

13. ஐயஞ் செய்தலாவது :தலைவன்   சொல்லையும்    செயலையும்
ஐயுற்றுக் கருதுதல்.
 

எ - டு :

ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர்

எண்ணுவ தெவன்கொல் அறியேன் என்னும்

(கலி-4)
 

இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.