மெய்ப்பாட்டியல்

14. அவன்தமர் உவத்தலாவது :     தலைவனைச்     சார்ந்தாரைக்
கண்டுழியும்  அவர்   சொற்கேட்டுழியும்   உளம்   மகிழ்தல்.   எ - டு :
வந்துழிக்கண்டு கொள்க.
 

அவன்      தமரேயன்றி     அவன்நாட்டுப்பொருள்   முதலியவற்றை
உவத்தலையும் இதன்கண் அடக்கிக் கொள்க.
 

எ - டு :

........................ அவர் நாட்டு

மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு

காலை வந்த காந்தள் முழுமுதல்

மெல்லிழை குழைய முயங்கலும்

இல்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே

(குறு-361)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

15. அறனழித் துரைத்தலாவது :பிரிவுத்    துன்பத்தான்      உளம்
நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்து அறமில்லை என வெறுத்துப்
பேசுதல்.
 

எ - டு :

ஓஒ கடலே,

தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமைஎடுத்துப்

பற்றுவேன் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென்

நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய்

செய்யும் அறனில்லவன் .......

(கலி-144)
 

என்பது தலைவன் அறனில்லான் என்றது.
 

ஊஉர் அலரெழச் சேரி கல்லென

ஆனா தலைக்கும் அறனில் லன்னை

தானே இருக்க தன்மனை

(குறு-262)
 

என்பது அன்னை அறனில்லாள் என்றது.
 

தன்னுயிர் போலத் தரீஇ உலகத்து

மன்னுயிர் காக்குமிம் மன்னனும் என்கொலே

இன்னுயிர் அன்னானைக் காட்டி எனைத்தொன்றும்

என்னுயிர் காவா தது

(கலி-143)
 

என்பது அரசன் அறனில்லான்  என்றது. இஃது  வெகுளிக்குப்  பொருளாக
அமையும்.   அறனளித்துரைத்தல்   எனப்   பாடங்கொண்டு  அதற்கேற்ப
விளக்கந்   தருவார்   பேராசிரியர்.   அது   பொருந்தாமையை   ஆங்கு
நெஞ்சழிதல் எனப் பின்வருதனான் அறியலாம்.
 

16. ஆங்கு நெஞ்சழிதலாவது :    அறனழித்துரைத்தாங்குத்     தன்
நெஞ்சழிவு தோன்றப் பேசுதல். ஆங்கு உவமச்சொல்.