316மெய்ப்பாட்டியல்
எ - டு :

பொங்கிரு முந்நீ ரகமெல்லாம் நோக்கினை

திங்களுட் டோன்றி யிருந்த குறுமுயால்

எங்கேள் இதனகத் துள்வழிக் காட்டீமோ

காட்டீயா யாயின் கதநாய் கொளுவுவேன்

வேட்டுவர் உள்வழிச் செப்புவேன், ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் - மதி திரிந்த

என்னல்லல் தீராயெனின்

(கலி-144)
 

எனவரும். பிறர்தாம் அறனழிய  நின்றார்  தான்  அறவழி  நிற்பதாகத்
தலைவி கருதுவதனான் தன்னெஞ்சழிய நின்று கூறினான் என்க. இதனைப்,
 

பேணான், துறந்தானை நாடும் இடம்விடாயாயின்

பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப்

புறங்காலிற் போக இறைப்பேன் முயலின

அறம்புணை யாகலு முண்டு

(கலி-114)
 

என்பதனான் அறிக. இஃது அவலத்திற்குப் பொருளாக அமையும்.
 

17. எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலாவது :பிரிவாற்றாது புலந்த
தலைவி நெஞ்சழிந்த நிலையில்தான் காணும் பொருள் எல்லாம்  தன்னைப்
போலத்  துன்புறுவதாகக்   கருதிக்கோடல்.   மெய்  என்றது  பொருளை.
உருவப்பொருளும்   அருவப்   பொருளும்  அடங்க  "எம்மெய்யாயினும்"
என்றார்.
 

எ - டு :

மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்!

நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய

என்றுயர் அறிந்தனை நரல்தியோ எம்போல

இன்றுணைப் பிரிந்தாரை உடையை யோநீ

(கலி-129)
 

எனவரும். இது  தலைவி  ஒப்புமை  கொண்டு  கூறியது.  இனி  மெய்
என்பதற்கு   உடலுறுப்பெனக்   கொண்டு   தலைவன்  பிற  பொருளைத்
தலைவியொடு ஒப்புமை கொண்டு கூறலையும் இதன்கண் அடக்கிக்கொள்க.
 

எ - டு :

நுதலும் முகனும் தோளும் கண்ணும்

இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ

ஐதேய்ந் தன்று பிறையு மன்று

மைதீர்ந் தன்று மதியு மன்று

வேயமன் றன்று மலையு மன்று

பூவமன் றன்று சுனையு மன்று