மெய்ப்பாட்டியல்

மெல்ல இயலும் மயிலு மன்று

சொல்லத் தளரும் கிளியு மன்று

என ஆங்கு

அனையன பல பாராட்டி ....... ....... 

(கலி-55)
 
எனவரும்.
 

இதன்கண் தலைவன், தலைவி உறுப்பொடு ஒப்புமை கொண்டு கூறியமை
கண்டு கொள்க.
 

மதியும் மடந்தை முகனும் அறியாப்

பதியிற் கலங்கிய மீன்

(குறள்-1116)
 
என்பதுமது.
 

  இது  தலைவி  கூற்றின்கண்  இளிவரலுக்கும், தலைவன் கூற்றின்கண்
உவகைக்கும் பொருளாக அமையும்.
 

18. ஒப்புவழி உவத்தலாவது :தம்   நிலைமைக்கேற்ப   ஒப்பநிற்கும்
பொருள்கண்டவழி உவப்புறுதல்.
 

எ - டு :

எழுதரு மதியங் கடற்கண் டாஅங்கு

ஒழுகுவெள் ளருவி ஓங்கு மலைநாடன்

ஞாயிற னையன் தோழி

நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே

(குறு-315)
 

இதன்கண் ஞாயிறு தலைவனுக்கும்  நெருஞ்சி  தலைவிக்கும் ஒப்பநின்று
தலைவிக்கு உவப்பளித்தவாறு கண்டு கொள்க.
 

கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்

பல்லா புகுதரும் புல்லென் மாலை

முல்லை வாழியோ முல்லைநீநின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை

நகுவை போலக் காட்டல

தகுமோ மாற்றிது தமியோர் மாட்டே

(குறு-162)
 

இதன்கண் முல்லை தலைவியின் முறுவலொடு ஒப்ப  நின்று தலைவற்கு
உவகை   செய்தவாறு   கண்டு  கொள்க.   இதற்கு   உரையாசிரியன்மார்
"பால்கொளல் இன்றிப் பகல்போன்  முறைக்  கொல்காக்  கோல்  செம்மை
ஒத்தி ...... (கலி-86) என்னும்  கலிச்  செய்யுளை எடுத்துக் காட்டுவர். அஃது
ஊடல்  நெஞ்சினளாய்த்   தலைவி   கூற்றாய்க்   கற்பிற்குரித்தாவதல்லது
ஈண்டைக்கு ஏலாமை அறிந்து கொள்க.  இன்பத்தை  வெறுத்தல்  முதலிய
இப்பொருள்கள் களவிற்கே உரியவை என்பது மேல் விளக்கப்பட்டது.
 

19. உறுபெயர் கேட்டலாவது :   தலைவனது    பெருமை    பற்றிய
புகழினைத் தலைவி விரும்பிக் கேட்டல்.