மெய்ப்பாட்டியல்
எ - டு :

கானலுங் கழறாது கழியும் கூறாது 

மேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது 

ஒருநின் னல்லது பிறிதியா துமிலனே 

இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் 

கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் 

தண்டா தூதிய வண்டினம் களிசிறந்து 

பறவை கிளருந் துறைவனை நீயே 

சொல்லல் வேண்டுமால் அலவ 

(அகம்-170)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக வரும்.
 

தலைவன்   தூது   விடுதலை முனியாமை எனவும் பொதுவிற் பொருள் கொள்ள நின்றதேனும் களவின்கண் தோழியை   இரந்து  பின்னிற்றலன்றித்
தலைவன்   தூது    விடுதல்    மரபன்மையான்    இது   தலைவிக்கே  உரியபொருளாகும் என்க.
 

6. துஞ்சிச்   சேர்தலாவது :   வரைதலால்   எய்தும்   கூட்டம்  தான்
விரும்பியாங்கு நிகழாமல் நீட்டித்தலான்  தலைவி உளம்  மடிந்து   மனை
சேர்ந்திருத்தல்.
 

துஞ்சுதல் - மடிந்திருத்தல். இதனைத்  அன்னோர், "துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவதஞ்சிப்  புகழெனின்  உயிரும்   கொடுக்குவர்"   (புற-182)   என வருதலானறிக.
 

எ - டு :

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை

கிளிகுறைத் துண்ட கூழை இருவி 

பெரும்பெயல் உண்மையின் இலையொலித் தாங்கென் 

உரஞ்செத்தும் உளெனே தோழியென் 

நலம்புதி துண்ட புலம்பி னானே 

(குறு-133)
 

எனவரும்.  இதன்கண் 'உரஞ்செத்தும்  உளென்'  என்றதனான் தலைவி
மடிமையுற்றுப்   புலம்பியிருத்தல்   புலனாகும்.   இஃது    இளிவரலுக்கும்
அழுகைக்கும் பொருளாக அமையும்.
 

7. காதல்   கைம்மிகலாவது :   மறைபிறரறியாதொழுகும் நிறைதளர்ந்து
புள்ளொடும்  பிறவொடும்  தலைவி நொந்து  கூறலும், நெஞ்சுளைதலுமாம்.
இடைக்காலத்தார் இதனைக் "காமமிக்கழிபடர்" என்பர்.
 

எ - டு :

யாரணங் குற்றனை கடலே, பூழியர் 

சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன 

மீனார் குருகின் கானலம் பெருந்துறை 

வெள்வீத் தாழை திரையலை 

நள்ளென் கங்குலும் கேட்குநின் குரலே

(குறு-163)