பொருள் :தெய்வம் அஞ்சல் முதலாக மறைந்தவை உரைத்தல் ஈறாயவை புறஞ்சொல் மாணாக்கிளவியொடு கூடிச் சிறந்த அப்பத்தும் மேற்கூறிய அழிவில் கூட்டத்திற்குரிய பொருளாகும். |
செவ்வொண்ணாக நிற்கும் தெய்வமஞ்சல் முதலிய ஒன்பதிற்கும் எண்ணும்மை விரித்துக் கொள்க. ஏகாரம் - இசைநிறை. |
தெய்வப் புணர்ச்சி முதலாக நிகழும் களவின் வழிவந்த வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்கும், உள்ளப் புணர்ச்சியளவாளே தமரான் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்கும் இவை ஒப்ப உரியவாக அமைந்து வருதலின் 'சிறந்தபத்து' என விதந்தோதினார் என்க. |
இவைபத்தும் மன்னிய வினைக்கு நிமித்தமாகாமல் மன்னிய வினையின்கண் நிகழ்வனவாய்க் கற்பொழுக்கத்திற்குச் சிறந்துரிமை பெற்று வருதலான் மேலனவற்றொடு ஒருங்கோதாமல் பிரித்தோதப்பட்டன என்க. |
மாணாத புறஞ்சொற் கிளத்தல், குடிமை சான்ற தலைமக்கட்கு ஒவ்வாது, சிறுபான்மை நிகழும் என்பது தோன்றப் பிரித்துக்கூட்டப் பட்டதென்க. |
ஈண்டுக் கூறிய இப்பொருள் பத்தும் கற்பியலுள் தலைவற்குரியவாக ஓதப்பெற்ற முப்பத்து மூன்று கிளவிகள் பற்றியும் தலைவிக்குரியவாக ஓதப்பெற்ற பத்தொன்பது கிளவிகள் பற்றியும் வரும் பண்பும் செயலுமாகிய உணர்ச்சிகளுள் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய சிறப்புடைய பொருள்கள் என்றதனான் அத்துணைச் சிறவாமல் வரும் பொருள்களும் உள என்பதும் அவை சிறுபான்மைய என்பதும் கொள்ளப்படும். |
ஊடலும் கூடலுமாகிய காம ஒழுக்கத்துள் கற்பிற்கு ஊடல் சிறந்துரிமை பெற்று வருமாகலின் தெய்வமஞ்சல் முதலிய இப்பொருள்கள் ஊடலை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது உய்த்துணரப்படும். இவற்றுள் ஏற்பவை தலைவற்கும் உரியவாக வருமென்க. |
1. தெய்வமஞ்சலாவது : களவின் கண்ணும் வரைவின் கண்ணும் "பிரியேன் பிரியின் தரியேன்" எனச் சூளுரைத்த தலைவன் கற்பின்கண் பொதுவாக ஓதல் முதலியவற்றின் கண்ணும் சிறப்பாகப் பரத்தையின் கண்ணும் பிரிந்தவழி அச்சூளுரை காரணமாகத் தலைவற்கு ஊறுநேருங்கொல் எனக்கருதி முழுமுதற் பொருளல்லாத பூத தத்துவப் பொருளாகவும் கிளவி |