ஐந்திணை மருங்கின் காமக் கூட்டமாவது, துணையமை நல்யாழ்த் துணைமை யோரியல்பெனவும் (களவு-1) அத்துணைவராவார் ஒத்த கிழவனும் கிழத்தியுமெனவும் அவர்தாம் ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் காண்ப. (களவு-2) எனவும் அவருள் தலைமகன் பெருமையும் உரனுமாகிய குணங்களை யுடையான் (களவு-7) எனவும் தலைவி அச்சமும் மடனும் நாணுமாகிய குணங்களையுடையாள் (களவு-8) எனவும் கூறி அவர்தாம் இருவகைக் கைகோளானும் ஒழுகும் ஒழுக்கமே 'மன்னிய வினை' என்றும் ஆசிரியர் புலப்படுத்திப் புகுமுகம் புரிதல் முதலாகக் கலக்கம் ஈறாக ஓதப் பெற்றவை களவிற்குரிய நிமித்தமாம் என்றும் முட்டுவயிற்கழறல் முதலிய எட்டும் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்குரிய நிமித்தமாம் என்றும் தெய்வ மஞ்சல் முதலிய பத்தும் கற்பிற்குரிய பொருள்களாம் என்றும் கூறி அவையும் அவை போல்வன பிறவுமெல்லாம் எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய அடிப்படைப் பெருள்களாம் எனவும் இதுகாறும் எடுத்தோதினார். அங்ஙனம் மன்னியவினை பற்றி வரும் பொருள்கள் யாவும் மேற்கூறிய கிழவனும் கிழத்தியும் அத்தகைய சால்புடையராகிய வழியே நிகழுமாதலின் அச்சால்புடைமைக்கு அடிப்படை இவை என்பது விளங்கும். |
எனவே அகத்திணைக்கண் எண்முறை நிலையாய மெய்ப்பாடுகள் தோன்றுதற்கு அடிப்படைப் பொருள்கள் புகுமுகம் புரிதல் முதலாயவை என்பதும் புகுமுகம் புரிதல் முதலாய பொருள்கள் நிகழ்தற்கு அடிப்படை தலைமக்கட்குரிய குணங்கள் என்பதும் அக்குணங்கள் அமைதற்குரிய அடிப்படை பிறப்பு முதலாய ஒப்புமைகள் என்பதும் தெளிவாம். |
அவற்றுள் குணங்கள் தலைமக்கட்குரிய இலக்கணமாக நிற்றலின் அவற்றைக் களவியலுள் விதந்து கூறி, பிறப்பு முதலாய இப்பத்தும் தலைமக்கட்குரிய இலக்கணமன்மையான் ஆண்டுக் கூறாமல் மெய்ப்பாட்டுப் பொருள் தோன்றுதற்குக் காரணமாதல் பற்றி ஈண்டு அமைத்தார் என்க. |
பொருள் : பிறப்பு முதல் திரு ஈறாகக் கூறிய இப்பத்தும் களவியலுள் ஒத்த கிழவனும் கிழத்தியும் எனக்கூறிய ஒப்பினது வகைகளாம். |
"முறையுறக் கிளந்த" என்றது களவியலுள் "ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோ னாயினும் கடிவரை யின்றே" என்றதையாம். ஈற்றேகாரம் இசைநிறை. ஏனைய ஏகாரமும் ஒடுவும் எண்ணுக் குறித்து நின்றன. வகை-கூறுபாடு. |