330மெய்ப்பாட்டியல்

1. பிறப்பாவது : குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான்  அமைந்த
அந்தணர்   முதலிய   நாற்குலம்.  "நலத்தின்கண்  நாரின்மை  தோன்றின்
அவனைக் குலத்தின்கண் ஐயப்  படும்" என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி
விளங்குதல் புலனாகும்.
 

எ - டு :

அவனுந்தான் 

ஏனல் இகணத் தகிற்புகை யுண்டியங்கும் 

வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் 

தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் 

கானக நாடன் மகன் ...... .......  

(கலி-39)
 

இதன்கண்   அவனும்   என்ற   உம்மையான் அவளும் கானநாடன் மகள் என்பது போதரும்.
 

2. குடிமையாவது : பண்பாடு. அஃதாவது குலனுடையார்க்குரியவை எனச்
சான்றோர் வகுத்துக் கொண்ட சால்பு.
 

குலம்,  குடிமை   என்பன   ஒரோவழி  ஒத்த  பொருளினவாய் வரும் எனினும் இரண்டற்கும் வேறுபாடு உண்டு  என்பதை இலக்கண  வகையான்
உணர்த்தற்பொருட்டுக்  குலத்தைப்  பிறப்பென்று  சிறப்பித்தோதினார் என
அறிக. குலஒழுக்கம் செயற்பண்பையும் குடிமை  என்பது  குணப்பண்பையும்
குறித்து வருமெனக் கொள்க.
 

மெய்ப்பாட்டிற்குரிய   பொருளாக    ஓதப்பெற்ற    பொருள்  யாவும்
பண்பும் செயலுமே ஆதலின்  அவற்றிற்கு அடிப்படையாய  குடிமையையும்
பிறப்பையும்  ஒப்பினது  வகையுள்  தலைமை யுடையவை என்பது தோன்ற
முதற்கண் வைத்தோதினார் என்க.
 

எ - டு :

நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் 

என்றும் என்றோள் பிரிபறி யலரே 

தாமரைத் தண்டா தூதி மீமிசைச் 

சாந்திற் றொடுத்த தீந்தேன் போல 

புரைய மன்ற புரையோர் கேண்மை 

நீரின் றமையா உலகம் போலத் 

தாமின் றமையா நந்நயத் தருளி 

நறுநுதல் பசத்தல் அஞ்சிச் 

சிறுமை யுறுபவோ செய்பறி யலரே 

(நற்-1)
 

இதன்கண்  நின்ற  சொல்லர்  என்பதனான் தலைவனது  பண்பும் (குடிமை)
தம்மின்றமையா நம் என்பதனான் தலைவியது   பண்பும்   விளங்குதலைக்
கண்டு கொள்க.