350உவமவியல்

ஒத்தல்  என்பது    உவமத்திற்கும்    பொருளுக்கும்   பொதுவாகிய
தன்மையையேயன்றி அப்பொருள்கள் அல்ல என்க.
 

சூ. 283 :

சுட்டிக் கூறா உவம மாயின்

பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே 

(7)
 

க - து :

உவமச்சொல்லும்    உவமத்தன்மையும்   தொக்கு   வருமாறும்
அவற்றை       விரித்துணருமாறும்    பற்றிக்    கூறுகின்றது.
சொல்லதிகாரத்துள் உவமத் தொகை மொழியின் இலக்கணத்தைக்
கூறுங்கால்   "உவமத்   தொகையே    உவமவியல்"    எனத்
தோற்றுவாய் செய்ததை ஈண்டு விதந்து கூறுகின்றார் ஆசிரியர்.
 

பொருள் :இவ்வுவமம் இப்பொருளை இன்னவாற்றான் விளக்கி நின்றது
என  உவமத்தின் உவமத்தன்மையை உவமச்சொல்லோடு கூட்டிக் கூறாமல்
தொகுத்துக் கூறப்பெற்ற  உவமத் தொடராயின், உவமிக்கப்படும் பொருட்கு
எதிரே  வினையும்  பயனும் மெய்யும் உருவுமாகிய உவமத் தன்மைகளைப்
பொருத்தி   நோக்கி   அவற்றுள்   பொருந்துவனவற்றை அவ்வுவமமாகத்
தேர்ந்து கொள்க.
 

"விரவியும்    வரூஉம்   மரபின"   வாதலின்  "புணர்ந்தன கொளலே"
எனப்பன்மையாற்   கூறினார்.  சுட்டிக்கூறுதலாவது கருதிய  உவமத்தன்மை
விளங்க விரித்துக் கூறுதலாம்.
 

உவமத்தொகை  மொழியிலும்  உவமத்தொடரிலும்  உவமப் பொருளும்
உவமிக்கப்படும் பொருளும் விரிந்தே நிற்குமாதலின் "சுட்டிக் கூறா உவமம்"
என்றது  உவமத்தன்மையையும் உவம உருபுச் சொல்லையும் என்பது தாமே
போதரும்.
 

இவ்வாசிரியர்   முன்னையோர்   மரபு  பற்றி அன்ன, ஆங்க முதலிய
உவமச்  சொற்களை உவமம்  என்று குறியீடு செய்து ஓதுவராகலின் சுட்டிக்
கூறா    உவமமென   உவமத்   தன்மையையும் உருபையும் ஒருங்குணரப்
பொதுப்பட ஓதினார் என்க.
 

தொடர்மொழிக்கண்   உவமஉருபு  தொக்கு வருதலை உவமத்தொகைத்
தொடர்  என்றும், தொகைமொழிக்கண் உவம  உருபும் உவமத் தன்மையும்
ஒருங்கு தொக்கு  வருதலை  உவமத் தொகைமொழி  என்றும்  வழங்குதல்
இந்நூல்நெறி  என்பதனை  எச்சவியலுள்   விளங்கக்   கூறினாம். ஈண்டுச்
சுட்டிக்கூறா  உவமம்    என்றது    தொடர்மொழி  தொகைமொழிகட்குப் பொதுவாக நின்றதென்க.