வரலாறு :"பவளம் போற் செந்துவர்வாய்" என்பது உவமையும் உருபும் விளங்க எடுத்துக்கூறிய உவமத்தொடர். இனி அத்தொடர் தன் மொழிப்பொருள் சிதையாமல் 'பவள வாய்' எனவருதல் சுட்டிக் கூறா உவமத்தொகை மொழியாம். |
இனிப், பவளம் போலும் வாய் என்பதும் பவளச் செவ்வாய் என்பதும் சுட்டிக் கூறா உவமத்தின்பாற்படும். என்னையெனின்? பவளம் போலும் வாய் என்பதன்கண் உவமத்தன்மையும் பவளச்செவ்வாய் என்பதன்கண் உவம உருபும் விரியாமையான் என்க. இவற்றுள் முன்னது உவமைத்தொகை எனவும் பின்னது உவமஉருபுத்தொகை எனவும் விளக்கப் பெறும். |
இவ்விலக்கண நெறியை நெகிழ்ந்து "உவம உருபிலது உவமத் தொகையே" என்னும் நன்னூற் சூத்திரத்தையும் பிற இடைக்கால நூல்களையும் இலக்கணமாகக் கருதிக் கொண்டு அவற்றின் வழித் தொல்காப்பிய மரபினை நோக்குதல் ஒவ்வாதென அறிக. |
இச்சூத்திரத்திற்குரிய இளம்பூரணருரை சிதைவுற்றுப்பின் செப்பஞ் செய்யப் பெற்றுள்ளது என்பதை ஊன்றி நோக்கின் உணரலாம் அவ்வுரையுள் காணப்படும் |
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
நோக்கக் குழையும் விருந்து |
(குறள்-90) |
என்னும் எடுத்துக்காட்டினை நோக்கின் சுட்டுச் சொல்லும் உவம உருபுமின்றி வருவது சுட்டிக் கூறா உவமம் என்பது அவர் கருத்தாதல் புலப்படும். தண்டியலங்கார உரையாசிரியர் இக்குறட்பாவை எடுத்துக்காட்டி இது தொகையுவமம் என்பார். அதனான் உவம உருபின்றி வருவது தொகையுவமம் என்பது அவர் கருத்தாதலை அறியலாம். |
உவம உருபினை விரித்துக் கூறாமல் உவமத்தை எடுத்துக் காட்டிய அளவே நிற்றலான் இதனை எடுத்துக்காட்டுவமை என்பர் உரையாளர். உவமம் யாவும் எடுத்துக்காட்டப் பெறுவனவேயாதலின் அங்ஙனங் குறியீடு செய்தலாற் பயனின்மை யறிக. அதனான் சுட்டிக் கூறா உவமம் என்பதன் நுட்பமும் இவ் இலக்கணமும் வெளிப்படாமையும் உணர்க. |
சூ. 284 : | உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் |
(8) |
க - து : | சுட்டிக் கூறாத வழித் தொக்கு நிற்கும் உவமத் தன்மையைப் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளல் என்ற விதியைச், சுட்டிக்கூறப்பெறும் உவமைக்கும் எய்துவிக்கின்றது. |