354உவமவியல்

மயங்குப."   எனக்கூறி    இளம்பூரணரைக்  குறிப்பான்  மறுத்துரைத்தார்.
எடுத்துக்காட்டாக  அவர் இரும்புமுகஞ்  செறித்த   ஏந்தெழின் மருப்பின்
(புறம்-169) என்னும் செய்யுளைக் காட்டியுள்ளார். அவ்வாறு வருவனவற்றை,
 

வேறுபட வந்த உவமத் தோற்றம் 

கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் 

(உவம-34)
 

என்னும்    சூத்திரத்துள்     அடக்கிக்     கொள்ளுதலே   நேரிதாகும். பேராசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் அவருரையான் விளங்கும்.
 

சூ. 286 :

பெருமையும் சிறுமையும் சிறப்பிற் றீராக் 

குறிப்பின் வரூஉம் நெறிப்பா டுடைய  

(10)
 

க - து :
 

உவம நிலைக்களங்களுக் காவதொரு முறைமை கூறுகின்றது.
 

பொருள் :சிறப்பும், நலனும்,  காதலும், வலியும், கிழக்கிடு  பொருளும்
காரணமாக  ஒரு  பொருளை  உவமிக்குங்கால்  கூறப்பெறும் பெருமையும்
சிறுமையும் உயர்ந்ததன்  மேற்றே உள்ளுங்  காலை என்றதற்கேற்ப அவை
சிறப்பிற்றீராத குறிப்பினவாய் வரும் முறைமையை உடையனவாகும்.
 

"சிறப்பிற்  றீரா  நெறிப்பா  டுடைய"  எனக் கூட்டுக. ஐவகைப் பண்பும்
நிலைக்களமாக  ஒருவன்  உவமங்  கூறுங்கால் சாலப் பெருமைப்படுத்தியும்
சிறுமைப்படுத்தியும்     கூறுதற்கு  ஏது   தன்   உள்ளத்தின்கண்  எழுங்
குறிப்பேயாகலின்   "குறிப்பின்   வரூஉம்" என்றும்   அங்ஙனம்  வருவன
சான்றோர் உளங்கொளத்  தக்கவாறு  அமைதல்  வேண்டுதலின்  "சிறப்பிற்
றீரா   நெறிப்பா  டுடைய"  என்றும் கூறினார். பெருமை,  சிறுமை என்பன
வடிவு குறித்தும் பண்பு குறித்தும் நின்றன.
 

எ - டு :

நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் 

ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை  

(பதிற்-14)
 

என்புழி அவ் ஐந்தும் ஒருங்குபுணர்ந்த விடத்து அவ்விளக்கம் எல்லையற்ற
பெருமைத்தாயினும்   அவ்வுவமம்   பொருளின்  வண்மையும் வன்மையும்
பற்றிய புகழொளியைக் குறித்து வந்தமைபின் சிறப்பிற்றீரா நெறிப்பாடுடைய
தாயினமை அறியலாம்.
 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 

நிலையின் இழிந்தக் கடை  

(குறள்-964)
 

என்புழி  உவமம்  மிக இழிந்த சிறுமைத்தாயினும் தலையின் நீங்கிய வழித்
தீண்டற்கும் அருவருப்பைச் செய்யும் மயிர் தலையின் நீங்காதவிடத்து மிக்க
மதிப்பொடு    பேணப்படுவதைக்   குறித்து     நிற்றலின்   சிறப்பிற்றீரா
நெறிப்பாடுடையதாயிற்று. இவை பண்பு பற்றியன.