356உவமவியல்

க - து:

உவமத்தையும்   பொருளையும்  இணைத்து  உவமத்  தன்மையை
உணரவரும் உவமச்   சொற்களின்   நிலையும்   ஒரு    கூற்றுத்
தொகையும்  உணர்த்துகின்றது.
 

பொருள் :சுட்டிக் கூறப்பெறும் உவமச் சொற்கள்தாம் அன்ன என்பது
முதலாகப்  புரைய   என்ப   தீறாகச்    சொல்லப்பட்ட    முப்பத்தாறும்
அவைபோல்வன  பிறவுமாம்.  அவற்றைக்  கூறுமிடத்து  அவை  பல்வேறு
குறிப்பினவாகும்.
 

உவமச்  சொற்கள் (உவமஉருபுகள்)  தொழில் முதனிலைச் சொல்லாயும்
பெயரெச்சச் சொல்லாயும்   வினையெச்சச்   சொல்லாயும்   வினைமுற்றுச்
சொல்லாயும்  அமைந்து   பொருள்   விளக்கஞ்   செய்தலின்  "பல்குறிப்
பினவே" என்றார்.
 

அவைதாம்  என்றது  "சுட்டிக்  கூறா உவம மாயின்" என்புழிச்  சுட்டிக்
கூறப்படுதலும்   பெறப்பட்டமையான்   அங்ஙனம்   சுட்டிக்   கூறப்படும்
சொற்களை  உணர்த்தி   நின்றது.    உவமம்    என்பது    உவமஉருபுச்
சொற்களைக்கருதி நின்றது.
 

என்றவை,   என்பன   இறந்தகாலம்  பற்றி  நின்ற வினையாலணையும்
பெயர்கள்.   ஆங்கவை   என்பதனுள்    ஆங்கு   என்பது   இசைநிறை
இடைச்சொல்லாகவும்  அவை   என்பது சுட்டுப்   பெயராகவும்   கொள்க.
எனாஅ என்பவை   எண்ணிடைச்  சொற்கள்.  அவை   செய்யுளிசைகருதி
அளபெடுத்து   நின்றன.   ஆறாறவையும்  என்பதனை அவை  ஆறாறும்
எனத்துணித்துக் கூட்டிப்பொருள் கொள்க.
 

அன்ன பிறவாவன : நேர நோக்க (இவை வகைச் சூத்திரத்துள் வருவன)
என்பனவும்; அமர, அனைய,  ஏர்ப்ப,  அற்று,  செத்து,  கெழுவ,  மலைய
(இவை   பேராசிரியர்   காட்டியன)   என்பனவும்;  ஏந்து,   சீர்,  (இவை
இளம்பூரணர் காட்டியன என்பனவும்;) ஏச, தேர், நவில், நாறு, மயங்க, ஆர்,
ஈன்ற,   முரணிய,    வாய்த்த,   உறைக்கும்,    வௌவும்  (இவை சங்கச் செய்யுட்களுள்   காணப்படுவன)   என்பனவும்;      இன்ன    என்பதன்
கடைக்குறையாய 'இன்' என்பதும், இவ்வாறு ஒப்புணர்த்தி வரும் பிறவுமாம்.
 

இன்   என்பது   ஐந்தாம்  வேற்றுமைப்பொருள்  பற்றி  வருமென்பார்
பேராசிரியர்.  'இன்  என்னும் வேற்றுமை   உருபு   ஒப்புணர்த்தி  வரும்
என்பது   உரையாசிரியன்மார்  பலர்  கருத்தாகும். இடைக்கால  இலக்கண
நூலார் கருத்தும்    அதுவே. அது   பொருந்தாதென்பது   சொல்லதிகார உரையுள் விளங்கக் கூறினாம்.