உவமவியல்357

மற்றும் பேராசிரியர் "எனவென்னும் எச்சம் பற்றி வருவனவும்" என்பார்.
அதனை  இன்ன என்பதன் திரிபாகிய என்ன என்பதன் இடைக்குறைவாகக்
கோடலே உரிச்சொல் மரபிற்கொத்த தென்க.

இனி, இவ்வுவமச் சொற்களை வினை, பயன், மெய், உரு என்னும் நால்
வகைக்கும்  பிரித்து  உரிமை  செய்து கூறுவார். அவற்றுள் கூறப்பெறாமல்
ஈண்டுக்  கூறப்பெற்றவை  ஒன்ற, என்ற,  மாற்ற,  பொற்ப,  நாட,  நடுங்க
என்னும் ஆறுமாம். ஈண்டுக் கூறாமல் வகைச் சூத்திரத்துக் கூறப்பெற்றவை
நேர, நோக்க  என்னும்  இரண்டுமாம். வகைச்  சூத்திரத்துக்  கூறப்பெறாத
ஆறும் பொதுவானவை என்பார் பேராசிரியர். 

வகைச்   சூத்திரத்துக்  கூறப்பெறாத ஆறற்கும் அன்னபிற என்பதனாற்
கொள்ளப்பட்டவற்றிற்கும் ஈண்டு  எடுத்துக்காட்டுத் தருதும். ஏனைவற்றிற்கு
அவ்வச் சூத்திரவுரையுள் காட்டுதும்.
 

எ - டு:1.    வேலொன்று கண்ணார்மேல்
     வேட்கைநோய் தீராமோ
(பேராசிரியர்
மேற்கோள்)
2.   வாயென்ற பவளம்(")
3.   மணிநிற மாற்றிய மாமேனி(")
4.   அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத்
     தோன்றி
(அக-11)
5.   வேயொடு நாடிய தோள்  (பேரா-மேற்)
6.   படங்கெழு நாகம் நடுங்குமல்குல் (")
7.   மானமர் நோக்கங் கலங்கிக் கையற்று(குறிஞ்சி-25)
8.   மலைமாறு மலைக்குங் களிற்றினர் (புறம்-197)
9.   நெருஞ்சியனைய வென்பெரும்
     பணைத்தோளே
(குறுந்-315)
10.  முத்தேர் முறுவலாய் (ஏர்)(கலி-93)
11.   கொடிச்சி யின்குரல் கிளிசெத்து
     அடுக்கத்துப் பைங்குரல் ஏனல்
     படர்தருங்கிளி
(ஐங்-289)
12.  துறந்தார் பெருமை துணைக்கூறின்
    வையத்து இறந்தாரை எண்ணி
    கொண்டற்று
(குறள்-22)
13.  யாழ்கெழு மணிமிடற் றந்தணன்(அகம்-கடவுள்)
14.  துணை மலரெழில் நீலத் தேந்தெழில்
    மலருண்கண்
(கலி-14)
15.  எச்சிற் கமையாது பார்த்திருக்கு மச்சீர்(நாலடி-345)
16.  மாசற மண்ணுற்ற மணி ஏசு
    மிருங்கூந்தல்
(கலி-77)