உவமவியல்359

உவமச் சொற்கள் தனித்துப் பொருளுணர்த்தும் எனக்கூறின் "தமக்கியல் பிலவே"   (இடை-1)   என்பதனொடு  மாறுகொள்ளுமெனின்? கொள்ளாது;
என்னை? உவமத்தையும் பொருளையும்  இணைப்பதற்கு அவை எச்சமாயும்
முற்றாயும் முதனிலைச்   சொல்லாயும்    வினைத்தன்மையுற்று  வருங்கால்
பெயரையும், வினையையும்  சார்ந்தல்லது தனித்து  வாராமையான்   என்க.
அதனானன்றே ஆசிரியர் "பெயரொடும் வினையொடும் நடை பெற் றியலும்"
என்றார் என்க.
 

இனி, உவம உருபுகளுள்  சில  பெயராயும் நிற்குமெனப் பிறழக் கருதிக்
கூறினாருமுளர்.  அவர் "மழையேர் ஐம்பால்"  என்பதன்கண்  ஏர் என்பது
பெயராக நின்றதென்பார். அது   மழைநேர் ஐம்பால்   என்னும் பாடத்தின்
பிழைவடிவமென்க. மற்று, ஏர் என்பது "முத்தேர்  முறுவலாய்" (கலி-)  என
உவமச்சொல்லாயும் வரும். அஃது ஏர, ஏர்ப்ப எனவும் வரும். ஆண்டு ஏர்
என்பது   எழுச்சி,    இலங்குதல்    என்னும்  பொருள்படும் உரிச்சொல்
வினைத்தன்மையுற்று முதனிலைத் தொழிற்சொல்லாய் நின்றதென்க.
 

இனி,   உவமச்சொற்களை   அவற்றின்  உரியடிகளை (வேர் நிலையை)
ஓர்ந்து அவை வினை பயன் மெய் உரு என்னும் நான்கற்கும் வகைப்பட்டுச்
சிறந்துரிமை பெற்று வருமாறு முறையே கூறுவார்.
 

சூ. 288 :

அன்ன ஆங்க மான விறப்ப 

என்ன உறழத் தகைய நோக்கோடு 

கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம்  

(12)
 

க - து : 
 

வினை   உவமத்திற்கு   ஏற்கும்    உவமச்சொற்கள்   இவை
என்கின்றது.
 

பொருள் :தொழிற்றன்மை   கருதிய   அன்ன   முதலாகிய  எட்டும்
வினையுவமத்தின் பாலாக  வரும் உவமச்சொற்களாம். ஒடு  எண்ணின்கண்
வந்தது. கண்ணிய என்பதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.
 

எ-டு:

1.எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து(அகம்-106)

 

2.கயநாடி யானையின் முகனமர்ந்தாங்கு (அகம்-6)
3.புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப்பிறழும்
(பெரு-269)
4.புலி விறப்ப ஒலி தோற்றலின்(இளம்-மேற்)
5.புலி என்னக் கலி சிறந்தூராஅய் ( " )