360உவமவியல்
6.செருநர்த் தேய்த்த செல்லுறழ்த்
தடக்கை
(முருகு-5)

 

7.பொருகளிற் றெருத்தின் புலிதகையப்
பாய்ந்து 
(இளம்-மேற்)

 

8.மான்நோக்கும் நோக்கு மடநடை
ஆயத்தார்
 

எனவரும்.  இவை  எட்டும்   வினையுவமத்திற்குச்  சிறந்து வருதற்குக்
காரணம் ஒருவாறு கூறுதும்.
 

அன்னவென்பது   அன்  (ஆன்)  என்னும்  சுட்டடியாகப் பிறந்து நால்
வகைக்கும்   ஒப்பக் குறிப்பு  வினை  இயல்பிற்றாய்    வருதலின்  ஈண்டு
முதற்கண்     ஓதப்பட்டது.   ஆங்கு   என்பது    அவ்வாறு   என்னும் பொருட்டாகலின் தொழிற்றன்மையைச் சுட்டுவதற்குச் சிறந்ததாயிற்று. மானும்
என்பது   மன்    (மன்னுதல்)   என்னும்   இடைச்சொல்லடியாகப் பிறந்து
நிலைபேறு   என்பது  பொருளாக   வருதலின் வினைக்குச் சிறந்ததாயிற்று.
விறத்தல்   என்பது   செறிவு   என்னும்   பொருட்டாதலின்  வினைக்குச்
சிறந்ததாயிற்று.    என்ன    என்பது    என்று    சொல்லுதல்  என்னும்
பொருண்மைத்தாகலின்    வினைக்குச்   சிறந்ததாயிற்று.   உறழ்  என்பது
முரணாதல், எதிர்தல் என்னும்  பொருட்டாகலானும் தகைய (தகுதி) என்பது
பொருந்துதல் என்னும் பொருட்டாகலானும் நோக்கு என்பது செயல் பற்றிய
குறிப்பாகலானும்   இவை   வினையுவமத்திற்குச்   சிறந்துரிமையாயின. பிற
இயைபுகள் உளவாயினும் ஓர்ந்து கொள்க.
 

சூ. 289 :

அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும்
(13)
 

க - து :

அன்ன   என்பதற்கு    எய்தியதன்மேற்   சிறப்பு    மரபு
கூறுகின்றது.
 

பொருள் :வினையுவமத்திற்கு உரிய உவமச் சொல் எட்டனுள் அன்ன
என்பது   வினையுவமத்திற்கேயன்றிப்   பயன்,  மெய்,  உரு என்னும் பிற
வகைக்கும் உவமச்   சொல்லாதற்குப்   பொருந்தும்.   இது  சுட்டடியாகப்
பிறந்ததாகலின் பொதுத்தன்மை எய்தி நின்றது.
 

எ - டு : 'மாரி   யன்ன   வண்கைத்  தேர்வேளாய்' (புறம்-153) எனப்
பயனுவமத்திற்கும்,  'இலங்கு  பிறையன்ன  விலங்குவால் வையேயிறு' என
மெய் யுவமத்திற்கும் 'செவ்வானன்ன மேனி' என உருவுவமத்திற்கும் சிவணி வந்தவாறு கண்டுகொள்க.
 

சூ. 290 :

எள்ள விழையப் புல்லப் பொருவக் 

கள்ள மதிப்ப வெல்ல வீழ 

என்றாங் கெட்டே பயனிலை உவமம்  

(14)
 

க - து :

பயன் உவமத்திற்கு ஏற்கும் உவமச்சொல் இவை என்கின்றது.