தமிழ் வாழ்க
 

ஆராய்ச்சி முன்னுரை*
 

[பேராசிரியர் தி. வே. கோபாலையர், எம்.ஏ.,]
 

பாவலரேறு    பாலசுந்தரனாரின்       தொல்காப்பியப்பொருளதிகாரக்
களவியல் முதலானவற்றின் ஆராய்ச்சிக் காண்டிகையுரையைப்  பயிலுவதற்கு
முன், பண்டைய சான்றோர்   உரைகளைப்   பயின்றவர்கள்   ஒரு   சில
செய்திகளை  மனங்கொள்ளுதல்   இன்றியமையாதது.    ஏறத்தாழ   2500
ஆண்டுகட்கு முன்தோன்றிய தொல்காப்பியத்திற்கு முன்னர்த்  தமிழில் பல
இலக்கண நூல்களும், விரிவான இலக்கியங்களும் இருந்திருத்தல் வேண்டும்.
தொல்காப்பியர்   காலத்திலேயே   தமிழரோடு  வடவரும்  நன்கு கலந்து
விட்டபடியால்  வடமொழி    மறைகளையும்,   அறநூல்களையும்   தமிழ்ச்
சான்றோர் பலரும் பயின்று   பின்பற்றினர்   என்பது ஒரு சாரார் கருத்து.
தமிழில் நான்மறை என்றிருந்த நூல்கள் வடமொழியின் வேறானவை. தமிழர்
பின்பற்றிய   அறநெறிகளும்   தமிழருக்கென்றே  ஏற்பட்ட தனித்தகவுடன்
கூடியனவே. பாரத தேயத்தின் எஞ்சிய பகுதிகளில் பெரிதும் பரவிய வடவர்
நெறிமுறைகளில்     சிக்குண்ணாமல்     தமிழர்     வாழ்ந்த   காலமே
தொல்காப்பியத்தின்   காலம்   என்பது   இக்கால   அறிஞர் சிலருடைய
கருத்தாகும். நம் உரையாளர் இவ் இரண்டாம் குழுவினைச் சார்ந்தவரே.
 

*இவ்வுரை  காண்டிகை   என்னும்   இலக்கண   வரையறைக்குட்பட்டு
முன்னை     உரையாளர்தம்       கருத்துக்கள்    பொருந்தாதனவற்றுள்
இன்றியமையாதவற்றிற்கு   மட்டும்   மறுப்பும்,    நூலாசிரியர் கருத்து மிக
நுட்பமாக  அமைந்துள்ளது எனக் கருதியவற்றுள் சிலவற்றிற்கு ஆராய்ச்சிக்
குறிப்பும்   மிகச்   சுருக்கமாக    வரையப்பட்டதாகலின்  அகலவுரையான்
நிறுவப்பட வேண்டிய பல கருத்துக்கள் மாணாக்கர்   தேர்ந்து  கொள்ளும்
முறையில்   சுருக்கமாகக்   கூறப்பட்டுள்ளன.    ஆய்வு   முன்னுரையில்
பேராசிரியர்    ஐயமாகவும்   மறுப்பாகவும்  தொல்லுரையாளர் உரையைப்
போற்றியும் கூறியுள்ளவற்றிற்கு எனது தமிழிலக்கணக் கோட்பாட்டு  ஆய்வு
நூலின்கண் விளக்கந்தர முயல்வேன்.  இதனைப்    பயிலும்   மாணாக்கர்
ஐயரவர்கள்  சுட்டிக்கூறும்  இடங்களை இவ்வுரையொடு ஊன்றி நோக்கியும்
அணியவும் சேயவுமாக   ஆங்காங்கே வரையப்பட்டுள்ள  கருத்துக்களொடு
ஒப்பு நோக்கியும், பொருளதிகார உரை முதற்பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ள
பொருளதிகாரக்   கோட்பாடு    என்னும்      கட்டுரைச்    செய்திகளை
இணைத்தாய்ந்தும் தேர்ந்து கொள்வாராக.
 

இப்பொழுது கிடைத்துள்ள  சங்கப்பாக்கள்   பெரிதும்   தொல்காப்பிய
நெறியை    ஒட்டியனவாயினும்   அவற்றுள்    தொல்காப்பியம்    கூறும்
அகத்திணைக்  கிளவிகளுக்கும்   புறத்திணைத் துறைகளுக்கும் போதுமான
எடுத்துக்காட்டுக்கள்  காணப்பெறாமையான் வந்துழிக்   காண்க   என்னும்
மரபுத் தொடரே  எழுதப்படலாயிற்று.   கைகோள்வகை   முதலியவற்றைப்
பெரிதும் கருதாமல் நிகழ்ச்சியை   உணர்ந்து   கொள்ளுமளவில்   மட்டும்
சிலவும் -   குறைபாடுண்மையறிந்தும்      பிறிதாறின்மையின்     சிலவும்
காட்டுக்களாகத் தரப்பட்டுள்ளன.  ஐயரவர்களின்   கருத்தை    விளங்கிக்
கொள்ள ஒருசிலவற்றிக்கு மட்டும் இங்கே அடிக்குறிப்புத் தரப்பட்டுள்ளது.