ஒருவரை ஒருவர் எய்துதற்கும் பிரிவின்றி இன்புறுதற்கும் ஆவன இவை எனத் தமக்குத் தாமே கூறிக்கோடல். (5) நாணுவரையிறத்தல் என்பது, தலைமகனுக்காயின் கருமத்தான் நாணும் நிலை கடந்து வேணவாவுற்று நிற்றல். தலைவிக்காயின் பெண்மை காரணமாக ஒடுங்கி நின்ற உள்ளம் தன்நிலை கடந்து கிளர்ந்து நிற்றலாம். (6) நோக்குவவெல்லாம் அவையே போறல் என்பது', தம்மான் நோக்கப்பெறும் புள்ளும் விலங்கும், கடலும் கானும் முதலிய அஃறிணைப் பொருள்களும் தம்மேபோல வேட்கை முதலாய உணர்வுகளான் உழல்வனவாகத் தோன்றுதலாம் 'அவையே' என்பது அத்தன்மையனவே என்றவாறு. இதனை "அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்" (பொருள் - 2) எனப்பொருளியலுள் கூறுவார். (7) மறத்தல் என்பது, பிறப்பும் குடிமையும் பிறவுமாகிய தம் தகவுகளை நினையாமையும், ஆயம், விளையாட்டு முதலியவற்றின்கண் சோர்வுறுதலுமாம். (8) மயக்கம் என்பது, செய்வனவற்றின்கண் ஆராய்ச்சியும், கடைபிடியுமின்றி நெகிழ்தலும் விளைவறியாது பேசுதலும், செயல் புரிதலுமாம். (9) சாக்காடு என்பது, தலைமகற்காயின் மடலேறுதல், வரை பாய்தல் முதலியவற்றை எண்ணுதலும் கூறுதலுமாம். தலைமகட்காயின் புலன்கள் மனத்தின்வழி நிகழாமல் கையறவுறுதலும் சாதற்குத் துணிந்தவளாகக் கூறுதலுமாம். |