திணைக்குரிய மாந்தரிடத்துத் தலைவன் முதலானோர் கூற்று நிகழ்த்துமிடத்தும் பொருந்துமாற்றான் அமைந்து வரும் என்பது விளங்கப் பொதுப்பட "இன்னவை நிகழும் என்மனார் புலவர்" என்றார். |
அறத்தொடு நிற்றலும், வரைவு கடாதலும் பிறவும் பற்றி வருவனவெல்லாம் அடங்க இவை ஏழும் என்னாது 'இன்னவை' என்றார். அவையெல்லாம் ஓராற்றான் இவற்றுள் அடங்குமாறறிந்து கொள்க. |
இவற்றை இயற்கைப் புணர்ச்சித்திறன் கூறியதாக இளம்பூரணர் வரைதலும், இவை தலைவனுக்கே உரியவை என்பதுபோல நச்சினார்க்கினியர் வரைதலும் மயங்கவைத்தல், மாறுகொளக்கூறல், குன்றக்கூறல் என்னும் சிதைவின்பாற்படுமென்க. |
பொருள் : 1) முன்னிலையாக்கல் என்பது; தாம் உரைக்கப் புகுவனவற்றைக் கேட்டற்குரியாரை விளித்து முன்னிலையாக்கிக் கோடலாம். புள்ளும், விலங்கும், கடலும், கானலும் தம் நெஞ்சுமாகிய அஃறிணைப் பொருள்களும் அடங்கப் பொதுப்பட முன்னிலையாக்கல் என்றார். |
| எ - டு : | இடிக்குங் கேளிர் நுங்குறை யாக |
| நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல |
(குறுந்-58) |
இது தலைவன் பாங்கனை முன்னிலைப்படுத்தியது. |
| அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் |
| தன்னூர் மன்றத்து என்னன் கொல்லோ |
| இரந்தூண் நிரம்பா மேனியொடு |
| விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே |
(குறு-33) |
இது தலைவி தோழியை முன்னிலைப்படுத்தியது, |
| வேம்பின் பைங்காய் என்தோழி தரினே |
| தேம்பூங் கட்டி என்றனிர் இனியே |
| பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் |
| தைஇத் திங்கள் தண்ணிய தரினும் |
| வெய்ய உவர்க்கும் என்றனிர் |
| ஐய! அற்றால் அன்பின் பாலே |
(குறுந்-196) |
இது தோழி தலைவனை முன்னிலைப்படுத்தியது. |
| யார்அணங் குற்றனை கடலே! |
(குறு-163) |
இது தலைவி கடலை முன்னிலைப்படுத்தியது. |