5) மெலிவு விளக்குறுத்தல் என்பது : தணத்தலும் வரைவு நீட்டித்தலும் அலரெழுதலும், தமர் வரைவுமறுத்தலும் பிறவு மாகியவற்றான் நேர்ந்த வருத்தத்தைக் கேட்போர் உளங்கொளக் கூறுதலாம். |
அறத்தொடு நிலை, வரைவு கடாதல், அல்ல குறிப்படுதல் முதலியவை பற்றி நேர்வனவெல்லாம் இதன்கண் அடங்கும். |
| எ - டு : | ஒண்டொடி அரிவை கொண்டனள் நெஞ்சே |
| வண்டிமிர் பனித்துறைத் தொண்டி யாங்கண் |
| உரவுக்கடல் ஒலித்திரை போல |
| இரவி னானும் துயிலறி யேனே |
(ஐங்-172) |
இது தலைவன் தன் மெலிவு கூறியது. |
| மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் |
| கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் |
| கொடிய ரல்லரெம் குன்றுகெழு நாடர் |
| பசைஇப் பசந்தன்று நுதலே |
| ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே. |
(குறு-87) |
இது தலைவி தன் மெலிவு கூறியது, பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. |
6) தம்நிலையுரைத்தல் என்பது: களவொழுக்கத்தின் கண் நிகழும் நிகழ்ச்சிகட்கு ஏற்பத்தலைவன், தலைவி, தோழி முதலானோர் தம் நிலையினை எடுத்துக் கூறுதலாம். |
தலைவன் பாங்கனிடத்தும், தோழியிடத்தும் கூறலும் தலைவி அறத்தொடுநிலை, வரைதல் வேட்கை பற்றியவாகக் கூறலும் தோழி சேட்படை உடன் போக்கு முதலியவை பற்றிக் கூறலும் பிறவும் இதன்கண் அடங்கும். |
| எ - டு : | இடிக்குங் கேளிர் நுங்குறை யாக |
| நிறுக்க லாற்றினோ நன்றுமன் தில்ல |
| ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் |
| கையில் ஊமன் கண்ணிற் காக்கும் |
| வெண்ணெய் உணங்கல் போல |
| பரந்தன் றிந்நோய் தோன்றுகொளற் கரிதே |
(குறு-58) |
இது தலைவன் பாங்கனிடத்துத் தன்நிலை கூறியது. |
| உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை |
| ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு |