கடைச்சங்க காலம் என்று கூறப்படுவது தொல்காப்பியத்திற்குச் சில நூற்றாண்டுகள் பிற்பட்டதாகும். அது கி. மு. 2 - ஆம் நூற்றாண்டிற்கும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகும். இவ் ஐந்து நூற்றாண்டுகளில் புலவர் பலரான் பாடப்பெற்ற பல்லாயிரம் பாடல்களுள் மிகச்சிலவே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனத் தொகுக்கப் பெற்றிருக்கலாம். இவை தொகுக்கப் பெற்ற காலம் கடைச்சங்கத்தின் இறுதிப் பகுதியாக இருக்கலாம். இவற்றுள் புறநானூற்றுப் பாடல் ஒவ்வொன்றின் இறுதியிலும் இன்னாரை இன்னார் பாடியது என்றாற்போல வரையப்பட்டுள்ள குறிப்பு, பாடலைப் பாடிய ஆசிரியராலேயே இணைக்கப்பட்டிருக்கலாம். இப்பாடல்களின் திணை, துறை பகுப்பு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இணைக்கப் பெற்ற பிற்சேர்க்கையே. இங்ஙனமே நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்ற தொகுப்புக்களில் ஒவ்வொரு பாடலை அடுத்துக் குறிக்கப்பட்டுள்ள அகப்பொருட்டுறைச் செய்தி, தொகுத்த ஆசிரியரால் இணைக்கப்பட்டிருக்கலாம். ஐங்குறுநூற்றுப்பாடல்களில் துறைச் செய்தி அதன் பழைய உரையாசிரியரின் கருத்தாக இணைக்கப் பட்டிருக்கலாம். பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற நூல்களில் உள்ள பாடல் பற்றிய கீழ்க் குறிப்பு அவ்வந் நூலுக்கு உரை வரைந்த சான்றோர்கள் இணைத்தனவாகலாம். கலித்தொகையின் துறைச்செய்தி நச்சினார்க்கினியர் வரைந்தனவே. எனவே எட்டுத்தொகையில் உள்ள அகப்பொருட் செய்திகள் பற்றிய பாடல்களில் அடிக்குறிப்புக்கள் யாவும் அவ்வப் பாடலாசிரியர் குறித்தன அல்ல என்பதே பெரும்பாலோர் கருத்து. |
மேலும் தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய நூல்களுள் பழையதாக இன்று நமக்குக் கிட்டியுள்ள இறையனார் அகப்பொருள் என்னும் நூல் சிவபெருமானால் இயற்றப்பட்டதாகவே அந்நூலின் உரையாசிரியர், கல்லாடம் பாடிய கல்லாடர், தொல்காப்பியத்திற்கு உரை வரைந்த பேராசிரியர் போன்ற பேரறிஞர்களின் முடிந்த முடிபாகும். இதற்கு மறுதலைப்பட்ட கருத்து இந்நூற்றாண்டின் தொடக்கம் வரை தோன்றியதாகத் தெரியவில்லை.எனவே தொல்காப்பியத்திற்கு உரை வரைந்த இளம்பூரணர், நச்சினார்க்கினியர் என்பாரும் இக்காலத்துத் தொல்காப்பிய உரை வளம் பதிப்பித்த சான்றோர் போல்வாரும் தொல்காப்பியக் களவு - கற்புப் பற்றிய ஓத்துக்களுக்கு உரை வரைந்துழி இறையனார் அகப்பொருள் நூற்பாக்களையும் அதன் உரைகளையும் உளங்கொண்டே தாமும் உரை வரைவாராயினர். |